“Leo – The Untold Story Of Chennai Super Kings’ என்ற புத்தகத்தைத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று ஒரு தனியார் ஹோட்டலில் நடந்திருந்தது. விழாவில் இசையமைப்பாளர் அனிருத், கிரிக்கெட் வீரர் அஷ்வின், முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்திருந்தனர்.
இந்நிகழ்வில் அஷ்வின் பேசுகையில், “தோனியை என்னுடைய 100 வது போட்டியில் நினைவுப்பரிசு வழங்க அழைத்தேன். அவரால் அப்போது வர முடியவில்லை. ஆனால், இப்போது அதை விடப் பெரிய பரிசைக் கொடுத்துவிட்டார்” எனப் பேசியிருக்கிறார்.
நிகழ்வில் அனிருத் பேசுகையில், “அஷ்வின் என்னுடைய பள்ளி சீனியர். அஷ்வின் ஓய்வை அறிவித்தபோது நானும் வருத்தமுற்றேன். என்னுடைய அக்கா வெளிநாட்டில் இருக்கிறார். அவர் ஒரு வழக்கறிஞர். அவரை அலுவலகத்தில் விடச் செல்கையில் பி.எஸ்.ராமன் சாரைப் பார்ப்பேன். எப்போதும் அலுவலகத்திலேயே இருப்பார். புத்தகம் எழுதும் அளவுக்கு அவருக்கு நேரம் இருந்தது ஆச்சரியம்தான். அவருக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்கும் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும். ஆல் தி பெஸ்ட் சிஎஸ்கே. விசில் போடு!” என்றார்.