‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் டிச.4-ல் குவிந்தனர். இதனால் அங்குப் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் அந்தத் திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததால் ரசிகர்கள் கூட்டம் இன்னும் ஆக்ரோஷமானது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்தார். அவரது மகன்(9) தற்போது கவலைக்கிடமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உயிரிழந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் பணமும், சிகிச்சைப் பெற்று வரும் 9 வயது சிறுவரின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இந்தச் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்தாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. மேலும், ரேவதி (39) உயிரிழந்தது தொடர்பாகவும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.