அபிஷேக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். இந்நிலையில்தான், இந்த டி20 தொடருக்கு முன்பாக முன்னாள் இந்திய வீரர்கள் யுவராஜ் மற்றும் தவாணுடன் அபிஷேக் சர்மா பயிற்சி முகாமில் ஈடுபட்டிருந்ததும், பிரையன் லாராவுடன் போனில் பேசி நிறைய ஆலோசனைகளை வாங்கியிருந்ததையும் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அபிஷேக் சர்மாவின் ஆரம்பகால பயிற்சியாளரான ராஜ் குமார் சர்மா இதைப் பற்றி பேசுகையில், “முதலில் ஒரு ரஞ்சி டிராபி போட்டியின் போதுதான் யுவராஜ் அபிஷேக் சர்மாவைச் சந்தித்தார். அபிஷேக்கின் திறனைப் பார்த்து வியந்தவர், நீ என்னுடன் பயிற்சி செய்ய வருகிறாயா எனக் கேட்டார். அதற்கு அபிஷேக், “கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் நீங்கள்தான் என்னுடைய முன்மாதிரி. கடவுளைப் போன்றவர்.’ எனக் கூறி அபிஷேக்கும் மகிழ்ச்சியோடு அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு யுவராஜ் அபிஷேக்கிற்கென்றே பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி பயிற்சிகளை வழங்கினார்.