இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போக நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இந்த முதல் சுற்றில் களமிறங்கவிருக்கின்றன. அயர்லாந்து அணி கடந்த ஒரு வருடத்தில் நிறைய போட்டிகளில் தோற்றிருக்கிறது. ஆனால், பெரும்பாலான சமயங்களில் கடுமையாகப் போராடியே வீழ்ந்திருக்கிறது. இந்திய அணி அயர்லாந்துக்குச் சென்று இரண்டு டி20 போட்டிகளில் ஆடியிருந்தது. இரண்டு போட்டிகளையுமே இந்தியாதான் வென்றிருந்தது. ஆனால், இரண்டிலுமே அயர்லாந்து கடுமையாகச் சவாலளித்திருந்தது. இரண்டாவது போட்டியில் 200+ சேஸிங்கின் போது வெறும் 4 ரன்கள் வித்தியாசத்திலேயே அயர்லாந்து தோற்றிருந்தது.
ஜிம்பாப்வேயில் சிக்கந்தர் ராசா சமீபமாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தனது பெர்ஃபார்மென்ஸின் மூலமாகவே ஜிம்பாப்வே அணி குறித்து அனைவரையும் பேச வைத்து வருகிறார். மற்ற வீரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்பட்சத்தில் உலகக்கோப்பையிலும் ராசா கடும் போட்டியளிப்பார்.
நமீபியா தரவரிசையின் அடிப்படையில் தகுதிச்சுற்றிலெல்லாம் ஆடாமலேயே இந்த முதல் சுற்றுக்கு தகுதிப்பெற்றிருந்தது. கடந்த உலகக்கோப்பையிலேயே அயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற அணிகளை வீழ்த்தி இரண்டாம் கட்ட அணிகளில் தங்களை முதன்மையாக காட்டிக் கொண்டது. ஆக, இந்த முறையும் நமீபியாவிடமிருந்து நல்லதொரு பெர்ஃபார்மென்ஸை எதிர்பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் ஆடும் பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே என இரண்டு கடும் சவாலளிக்கும் அணிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆக, வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதென்பது அத்தனை எளிய காரியமாக இருக்காது. அதேநேரத்தில், நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து போன்ற அணிகளுடன் இருக்கும் இலங்கை ஒப்பீட்டளவில் வெஸ்ட் இண்டீஸை விட குறைவான சவாலை எதிர்கொள்ளவே வாய்ப்பிருக்கிறது.