
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
கரூரில் தவெக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த நியமனங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16ஆவது பிரிவுகளுக்கு நேரடியாக முரணானவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், “இந்தச் சம்பவத்திற்காக கருணை அடிப்படையிலான நியமனங்கள் வழங்கப்பட்டால், இதுபோன்ற பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இதேபோன்ற வேலைவாய்ப்பை கோரி முன்வர வழிவகுக்கும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அரசு இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கும் போது, நிர்வாக அதிகாரத்தின் பயன்பாடு அரசியலமைப்புச் சட்ட வரம்புகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“நிர்வாக நடவடிக்கைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால், குழப்பமே நிலவும்,” என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், “அரசுப் பணியிடங்கள் மாநில அரசால் எளிதில் வழங்கப்பட வேண்டியவை அல்ல. அவை தகுதியின் அடிப்படையில் பெறப்பட வேண்டியவை. அவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் உணரப்பட வேண்டும். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பலர் உள்ளனர்,” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
என்ன நடந்தது?
2025 செப்டம்பர் 27 அன்று, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஜூலை மாதம் 10-ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், ஆகியோருக்கு பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், மோனிஷா, சந்திரகலா, ம.பிரிதர்ஷினி, பிரபாகரன், மல்லிகா, தீபலட்சுமி, நிவேதிதா, அஷ்வின்குமரன், சந்தியா ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் பதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
காவல்துறையில் மகாலட்சுமி, தனலட்சுமி இருவருக்கும் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. செ.பிரபாகரன், ஷர்மிளா இருவருக்கும் பதிவுத் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகருக்கு பேரூராட்சிகள் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும், அதே மாவட்டத்தைச் சேந்த ஜெயபிரகாஷுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, சதீஸ்குமார், விமல், செல்வராணி மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் செர்ந்த அகிலாவுக்கு வழங்கப்பட்டது.
மேலும், கரூர் மாவட்ட அலகில் அலுவலக உதவியாளர் பணிக்கு முருகன் மற்றும் சுதன் என்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட வருவாய் அலகில் மசால்ஜி பணிக்கான ஆணை செல்வராணிக்கு வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார், ரகுநாதன் ஆகியோருக்கு மாவட்ட வருவாய் அலகில் இரவுக் காவலர் பணிக்கான ஆணையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கு பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியின் இரவுக் காவலர் பணிக்கான ஆணையும் வழங்கப்பட்டன.

விஜய் பேசியது என்ன?
பின்னர் கரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில காயங்களை, வலிகளை மறக்க முடியாது. எல்லாவற்றையும்விட எனக்கு மிகப்பெரிய வலி என்றால் அது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்தான்.”
“மக்களைச் சந்தித்து, அவர்களது பிரச்னைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் பிரசாரங்களில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் எனப் பயணம் செய்தோம். அதேபோல, அரியலூர் கூட்டம் முடித்து பெரம்பலூர் செல்ல ஆயுத்தமானபோது, பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக உள்ளது, செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறினார்கள். எனவே நாங்கள் பெரம்பலூர் கூட்டத்திற்குச் செல்லவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்.”
“அதேபோல நாமக்கல் பிரசார கூட்டம் முடித்துவிட்டு கரூர் வரும்போது, கரூர் காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா? கரூரில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வர வேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம் அல்லவா?” என்று கேள்வியெழுப்பினார்.
அதோடு, “பிறகு ஏன் என்னை காவல்துறையே வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்றிருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “என் மனதை விட்டு கரூர் சம்பவம் என்றுமே நீங்காது. நமக்கு ஏற்பட்ட இந்த வேதனையான சம்பவத்தை அடுத்து வரக்கூடிய தலைமுறைகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, இனி இப்படியொரு அரசியல் சதியை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, கரூரில் ஒரு நினைவுச் சின்னம் தவெக சார்பாக அமைக்கப்படும்” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு