பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
குறிப்பு: இந்த செய்தியில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.
“பாலன்பூரில் 50,000 ரூபாய்க்காகத் தனது மனைவியைத் நண்பர்களுக்கு கணவன் விற்றுள்ளார். அவர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.” என்று மேற்கு பாலன்பூர் காவல் துறையினர் மே 26 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூரில் நடந்த இந்தச் சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட கணவன், தனது மனைவி காணவில்லை என்று கடந்த மே 11-ஆம் தேதி மேற்கு பாலன்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
காவல் துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், வெறும் இரண்டு நாட்களுக்குள் கிழக்கு பாலன்பூர் காவல் நிலையத்திலும் தனது மனைவி காணவில்லை என்று மற்றொரு புகாரை கணவன் பதிவு செய்தார்.
ஒரே விஷயத்திற்காக இரண்டு வெவ்வேறு காவல் நிலையங்களில் அவர் புகார் அளித்ததால் காவல் துறையினருக்கு அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC
காவல் துறையினரின் விளக்கம் என்ன?
காவல் துறையினரின் தகவல்படி, கடந்த மே 11-ஆம் தேதி மேற்கு பாலன்பூர் காவல் நிலையத்தில் தனது மனைவி காணவில்லை என்று ஒரு கணவர் புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மே 13-ஆம் தேதி அதே நபர் கிழக்கு பாலன்பூர் காவல் நிலையத்தில் மற்றொரு புகாரைப் பதிவு செய்தார். அதிலும் தனது மனைவி காணவில்லை என்றே அவர் குறிப்பிட்டிருந்தார்.
முதல் புகாரின் அடிப்படையில் பாலன்பூர் காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், இரண்டாவது புகார் வந்ததால் காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, தன்னைத் தனது கணவரே விற்றுவிட்டார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை அவர் கூறினார்.
தன்னைத் தனது கணவர் சில நபர்களுக்கு 50,000 ரூபாய்க்கு விற்றுவிட்டதாக அந்தப் பெண் காவல் துறையிடம் தெரிவித்தார்.
காவல் துறையினரின் தகவல்படி, குற்றம் சாட்டப்பட்ட கணவர் தனது மனைவியைத் தனது நண்பர்களுக்கே 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் தன் புகாரில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
காவல் துறையினரின் தகவல்படி, அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அவர்கள் கட்டாயப்படுத்தி அவரிடமிருந்த நகைகளைப் பறித்துள்ளனர். அவர்கள் அந்த நகைகளை விற்றுவிட்டனர்.
கணவரின் நண்பர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணைத் தடுத்து வைத்தும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தும் துன்புறுத்தியதாகக் காவல் துறையினர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
மேற்கு பாலன்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.கே. படேல் மற்றும் அவரது குழுவினர், கணவர் மற்றும் மற்ற நபர்களை கைது செய்துள்ளனர்.
பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC
இந்த ஒட்டுமொத்த வழக்கு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பாலன்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜிக்னேஷ் காமித், ஊடகங்களிடம், “பாலன்பூர் மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டு வெவ்வேறு காவல் நிலையங்களில், ஒரே பெண் காணவில்லை என்று இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த விஷயம் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, மாவட்டக் காவல் துறையினர் இந்த வழக்கை மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விசாரணை செய்தனர். ஒரே பெண் காணவில்லை என்று இரண்டு புகார்கள் வந்தவுடன், காவல் துறையினர் முதலில் புகார் அளித்த கணவரைக் கண்டுபிடித்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காவல் துறையினருக்குத் தெரியவந்தன. அதன் மூலமே ஒட்டுமொத்த வழக்கின் முடிச்சும் அவிழ்ந்தது” என்று கூறினார்.
காவல் துறை மேற்கொண்ட விசாரணை மற்றும் அதிர்ச்சித் தகவல்கள்
காவல் துறையினர் தீவிரமாகத் தேடி, அந்தப் பெண்ணைச் பத்திரமாக மீட்டனர். புகார் குறித்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, நடந்த முழுச் சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது.
“புகார் அளித்த அந்த கணவரே, தனது மனைவியைத் தனது நண்பர்களுக்கு 50,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்” என்று ஜிக்னேஷ் காமித் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட பெண்ணை அந்தக் கணவரின் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு, கட்டாயப்படுத்தி அவரிடமிருந்த கம்மல்களையும் பறித்துச் சென்றுள்ளனர்” என்று துணை கண்காணிப்பாளர் ஜிக்னேஷ் காமித் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Paresh Padhiyar/BBC
7 பேர் கைது
பாலன்பூர் காவல் துறையினர் அளித்த தகவலின்படி, இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரையும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களைக் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர், ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் காவல் துறையினர், அவரது குற்றப் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு விளக்கத்தைப் பெற பிபிசி குஜராத்தி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தச் செய்தி வெளியாகும் வரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் தரப்பு விளக்கம் கிடைக்கும் பட்சத்தில், இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு