பட மூலாதாரம், BBC/Shahnawaz
-
- எழுதியவர், சிது திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
கடந்த மாதம் 11-ஆம் தேதி, பிஹாரைச் சேர்ந்த 163 சிறுவர்கள் மத்தியப் பிரதேசத்தின் கட்னி ரயில் நிலையத்தில் பாட்னா-புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ரயில்வே போலீசாரால் ‘வலுக்கட்டாயமாக’ இறக்கிவிடப்பட்டனர்.
ஆள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் இந்த 163 குழந்தைகள் மற்றும் 8 ஆசிரியர்களை புலின் ரயிலில் இருந்து இறக்கி விட்டார்.
பிஹாரைச் சேர்ந்த குழந்தைகள் மகாராஷ்டிராவின் லாத்தூருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் துர்கேஷ் மரியா அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் ஜிஆர்பி (GRP) மற்றும் ஆர்பிஎஃப் (RPF) இந்த நடவடிக்கையை எடுத்தன.
இந்தக் குழந்தைகள் போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, தற்போது இந்தக் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்தக் குழந்தைகள் இறக்கிவிடப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய, பிபிசி நியூஸ் இந்தி குழுவினர் பிஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த விவகாரம் குறித்து தெரிந்து கொள்ள முயன்றனர்.
கட்னி ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட 163 குழந்தைகளில் 144 பேர் பீஹாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அராரியாவில் 55 வயதான கிஸ்மதியை நான் சந்தித்தேன்.
இந்தச் சம்பவத்திற்கு முன்பு அவர் ஒருபோதும் அராரியாவை விட்டு வெளியே சென்றதில்லை.
ஆனால் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பேரனுக்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னிக்கு 900 கிலோமீட்டர் பயணம் செய்ய அவர் ‘கட்டாயப்படுத்தப்பட்டார்’.
கிஸ்மதி பிபிசியிடம் கூறுகையில், “என் குழந்தைகள் கல்வி கற்கச் சென்றார்கள். அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஹாபிஸ்’ ஆவதற்காகப் படித்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மூன்றாவது ஆண்டு. ஆனால் போலீசார் அவர்களைக் கைது செய்ததை எனது மொபைல் மூலம் அறிந்தேன்.
பத்து நாட்களாக குழந்தைகளிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால், 6,000 ரூபாய் கடன் வாங்கி கட்னிக்குச் சென்றேன். அங்கே நான் போலீசாரிடம் சென்று அழுதேன், ஆனால் அவர்கள் என்னைக் குழந்தைகளைப் பார்க்க விடவில்லை. குழந்தைகளைப் பார்க்கும் வரை இங்கிருந்து நகர மாட்டேன் என்று கூறினேன். அதன் பிறகே குழந்தைகளை என்னிடம் காட்டினர்” என்றார்.
மதரஸாக்களில் வழங்கப்படும் கல்வி
ஒவ்வொரு ஆண்டும், பிஹாரைச் சேர்ந்த இஸ்லாமியக் குழந்தைகள் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள மதரஸாக்களில் படிக்கச் செல்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் சீமான்ச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சீமான்ச்சலில் பூர்னியா, கதிஹார், கிஷன்கஞ்ச் மற்றும் அராரியா மாவட்டங்கள் அடங்கும்.
பிஹார் சிறுபான்மையினர் ஆணையத்தின்படி, சீமான்ச்சலில் உள்ள கிஷன்கஞ்சில் 67%, கதிஹாரில் 42%, அராரியாவில் 41% மற்றும் பூர்னியாவில் 37% இஸ்லாமியர்கள் உள்ளனர்.
பிற மாநிலங்களில் கல்வி பயிலும் இந்தக் குழந்தைகள், ஆண்டுக்கு ஒருமுறை ஈத் விடுமுறைக்காக வீட்டிற்கு வருகிறார்கள். விடுமுறைக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் மதரஸாக்களுக்குத் திரும்புகிறார்கள்.
இந்த முறையும், பிஹாரின் அராரியா மற்றும் சுபால் மாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 163 குழந்தைகள் தங்கள் மதரஸாக்களில் சேர்வதற்காகப் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இந்தக் குழந்தைகளுடன் எட்டு மதரஸா ஆசிரியர்களும் சென்றனர்.
அவர்கள் ஏப்ரல் 11 அன்று காலை 7 மணியளவில் பாட்னா சந்திப்பிலிருந்து பாட்னா-புனே விரைவு ரயிலில் ஏறினர்.
கிஸ்மதியின் மகன் முகமது சன்னி பிபிசியிடம் கூறுகையில், “நாங்கள் மதியம் 1 மணியளவில் முகல்சராய் அருகே நிறுத்தப்பட்டோம். எங்கள் ஆசிரியர் எங்களுடைய ஆதார் அட்டை மற்றும் கிராமத் தலைவரின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் காட்டினார். அதன் பிறகு, முகல்சராய்லிருந்து செல்ல நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் பின்னர் நாங்கள் கட்னியில் நிறுத்தப்பட்டோம். அங்கேயும் எங்களுடைய எல்லா ஆவணங்களையும் காட்டினோம், ஆனால் அவர்கள் எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை. அங்கிருந்து, ஜாக்ருதி (குழந்தைகள் சீர்திருத்த இல்லம்) எனப்படும் இரண்டு அறைகள் கொண்ட இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கே எங்களுக்குச் சரியான உணவைக் கூட அவர்கள் வழங்கவில்லை” என்றார்.
பிஹாரைச் சேர்ந்த குழந்தைகள் மகாராஷ்டிராவின் லாத்தூருக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் துர்கேஷ் மரியா அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் ஜிஆர்பி (GRP) மற்றும் ஆர்பிஎஃப் (RPF) இந்த நடவடிக்கையை எடுத்தன.
துர்கேஷ் மரியா கூறுகையில், “குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவதை ஜிஆர்பி மூலம் அறிந்தேன். பின்னர் இது ஆள் கடத்தல் வழக்கு அல்ல என்று தெரிந்தாலும், இந்தக் குழந்தைகளை இவ்வளவு தூரம் அழைத்துச் செல்வதை நியாயப்படுத்த முடியாது. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. அவர்களின் குடும்பத்தினர் அவர்களை வாய்மொழியாக அனுப்பி வைத்தனர், எனவே அவர்கள் ஏன் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியவில்லை” என்றார்.
கட்னி ஜிஆர்பி அதிகாரி எல்.பி. காஷ்யப் ஊடகங்களிடம் கூறுகையில், குழந்தைகள் வேலைக்காக மகாராஷ்டிராவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற அடிப்படையிலேயே முழு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்றார்.
மேலும், “குடும்பத்தினரிடம் உறுதிப்படுத்திய பிறகு, அனைத்து குழந்தைகளும் மீண்டும் பிஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
லாத்தூரில் உள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக இருக்கும் சத்தாம் ஜார்ஜிஸ், இந்தக் குழந்தைகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னிடம் குழந்தைகளின் ஆதார் அட்டைகள் இருந்தன. என்னுடன் இருந்த 100 குழந்தைகளுக்காக பக்தஹாரா பஞ்சாயத்துத் தலைவர் குல்சூமின் லெட்டர் பேடில் எழுதப்பட்ட கடிதம் என்னிடம் இருந்தது. அதில், ‘ஏழைகளின் நலனுக்காக சதாம் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும் நான் நிறுத்தப்பட்டேன். எனது ஆறு வயது குழந்தையும் மனைவியும் கூட என்னுடன் இருந்தனர்” என்றார்.
சமூக விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது
பட மூலாதாரம், BBC/Shahnawaz
அராரியாவில் உள்ள ‘ஜன் ஜாக்ரன் சக்தி’ அமைப்பு நீண்ட காலமாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பணியாற்றி வருகிறது.
இந்த அமைப்பு முயற்சி எடுத்து, அராரியா நிர்வாகம் மற்றும் கட்னியில் உள்ள உள்ளூர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது.
இதற்குப் பிறகு, இந்த 163 குழந்தைகளின் சமூக விசாரணை அறிக்கை (எஸ்ஐஆர்) தயாரிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாகச் செயல்பட்டு வரும் ரமீஸ் ரேசா, ஜன் ஜாக்ரன் சக்தி அமைப்பைச் சேர்ந்தவர். அவர் வழக்கறிஞராகவும் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆள் கடத்தல் தொடர்பாக கட்னியில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த எஃப்ஐஆரில், தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் குழந்தைகளை அனுப்புவதாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் வார்டு அல்லது பஞ்சாயத்து அளவிலான சரிபார்ப்புக் கடிதம் இருந்தது மற்றும் அவர்கள் ரயில் மூலமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். குழந்தைகள் படிக்கச் செல்லும் மதரஸாவின் ஒப்புதல் கடிதமும் அவர்களிடம் இருந்தது” என்றார்.
“இந்த ஆவணங்கள் அனைத்தும் கட்னி போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்து எங்களைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவில் மதரஸாக்கள், மதரஸா தொடர்புடைய இயக்கங்கள், தாடியும் தொப்பியும் உடைய சிறுபான்மையினர் அல்லது ஒரு குறிப்பிட்ட தோற்றம் கொண்டவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
பாட்னாவிலிருந்து வரும் இந்தக் குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியுடன் ஆங்கிலம், மராத்தி மற்றும் கணிதக் கல்வியும் வழங்கப்படும் என்று மகாராஷ்டிராவின் லாத்தூரில் உள்ள ‘மதரஸா அஷ்ரஃபியா அஞ்சுமன்-இ-இஸ்லாமியா’வின் லெட்டர் பேடில் வழங்கப்பட்ட கடிதத்தையும் ஜன் ஜாக்ரன் சக்தி அமைப்பு காட்டியது.
அராரியா குழந்தைகள் பயின்று வந்த லாத்தூரில் உள்ள அந்த மதரஸாவையும் பிபிசி நியூஸ் இந்தி குழுவினர் தொடர்பு கொண்டனர். லாத்தூரில் உள்ள மதரஸா அஷ்ரஃபியா அஞ்சுமன்-இ-இஸ்லாமியாவின் இயக்குனர் அஜிசூர் ரஹ்மான் கூறுகையில், “அராரியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் எங்கள் மதரஸாவிற்கு வருகிறார்கள். எங்கள் ஆசிரியர்களில் ஒருவரான சதாம் சாப் அந்த ஊரைச் சேர்ந்தவர். அவர் தான் குழந்தைகளை அழைத்து வந்தார், ஆனால் இப்போது அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்த ஆண்டு முதல் குழந்தைகளுக்குக் கணினிப் பயிற்சியும் வழங்கத் திட்டமிட்டிருந்தோம்” என்றார்.
தற்போது அந்த மதரஸாவில் அமைதி நிலவுகிறது.
மற்ற மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு வருகிறார்களா என்று கேட்டபோது, அஜிசூர் ரஹ்மான், “கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் சிலர் வருகிறார்கள். ஆனால் சதாம் ஜி அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அராரியாவிலிருந்து அதிகக் குழந்தைகள் வருகிறார்கள்” என்றார்.
இந்த மதரஸா 1916 முதல் இயங்கி வருவதாகவும், இங்கு குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் குறிவைக்கப்படுகிறார்களா?
இந்தக் கேள்வி குறித்து, அராரியா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் தீபக் குமார் வர்மா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அரசு தான் பொறுப்பு. குழந்தைகளுடன் வந்த மதகுரு சரியான பதில்களை அளிக்கவில்லை. இது பற்றி எங்களுக்குத் தெரிய வந்ததும், நாங்கள் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, ஏப்ரல் 25 அன்று குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்” என்றார்.
மேலும், “குழந்தைகளுக்குப் பாதுகாப்பான பயணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும், இவ்வளவு குழந்தைகள் சென்றிருந்தால் அவர்களுடன் சில பாதுகாவலர்கள் இருந்திருக்க வேண்டும். கட்னி குழந்தைகள் நலக்குழு (CWC) அறிக்கையின்படி, இந்தக் குழந்தைகள் 6 முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். குழந்தைக்கு 14 வயது என்றால், அவர் எங்காவது படித்திருக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் அவரிடம் இருக்க வேண்டும்” என்றார்.
“குழந்தைகளைப் பாதுகாப்பதாக” நிர்வாகம் கூறும் வாதத்தை குழந்தைகளின் பெற்றோர்கள் நிராகரிக்கின்றனர். சமாஜ்வாதி கட்சியின் கட்னி மாவட்டத் தலைவர் ஏ.கே. கான், எந்தவித யோசனையும் இன்றி கட்னி நிலையத்தில் குழந்தைகள் இறக்கிவிடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், “குழந்தைகள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களைத் துன்புறுத்துவதற்காகவே ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டனர். இது ஆள் கடத்தல் வழக்கு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாதபோதும் இவ்வாறு செய்யப்பட்டது. அவர்கள் சுமார் 13 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர், அவர்களின் குடும்பத்தினர் வந்த பின்னரே விடுவிக்கப்பட்டனர்” என்று குற்றம் சாட்டினார்.
போபாலைச் சேர்ந்த சமூக அமைப்பான சர்வ தர்ம சத்பாவனா மஞ்சின் செயலாளர் ஹாஜி முகமது இம்ரான் ஹாரூனும் இந்த விவகாரம் முற்றிலும் நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள் அனைவரும் அவர்களின் பெற்றோரின் சம்மதத்துடன் அனுப்பப்பட்டனர், எனவே ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்வது தவறு என்று ஹாஜி இம்ரான் ஹாரூன் கூறுகிறார்.
அராரியாவைச் சேர்ந்த கிஷ்வர் ஜஹானின் மகன் இர்பானும் மகாராஷ்டிராவில் உள்ள மதரஸாவில் படிக்கிறார்.
அவர் மதரஸாவிற்குச் செல்வது இது இரண்டாவது முறை.
இதற்கு முன்பு, அவர் உள்ளூர் மதரஸாவில் பயின்றார். ஆறு குழந்தைகளின் தாயான கிஷ்வர் ஜஹான், தனது கணவரை இழந்துவிட்டார்.
அவர் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “போலீசார் எங்களைத் துன்புறுத்தினால், அது போலீசாரின் தவறு. அது எங்கள் தவறு அல்ல. நாங்கள் எங்கள் பிள்ளைக்குக் கல்வி கற்பிக்கவில்லை என்றால், அவன் என்ன செய்வான்? எங்களுக்கு இழப்பீடு வேண்டும். எங்கள் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப எங்களிடம் பணம் இல்லை. பள்ளிகளில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்தக் கட்டணத்தைச் செலுத்த எங்கிருந்து பணம் கிடைக்கும்? அரசுப் பள்ளிகளில் யாரும் படிப்பதில்லை. எங்களால் தனியார் பள்ளிக்கு அனுப்ப முடியாது, அதனால் தான் மதரஸாவிற்கு அனுப்பினோம்” என்றார்.
இந்தச் சம்பவத்தால் பயந்துபோயுள்ள இர்பான், “போலீசார் எங்களைத் தடுக்கிறார்கள். எனவே இப்போது வெளியூர் மதரஸாவிற்குச் செல்வதா வேண்டாமா என்று பார்ப்போம். எங்களை வெளியே செல்ல விடவில்லை என்றால், அவர்கள் இங்கேயே பள்ளி அல்லது மதரஸாவைக் கட்ட வேண்டும்” என்கிறார்.
முகமது ஆசிப்பின் மகன் கடந்த நான்கு ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் உள்ள மதரஸாவிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அவர் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், “குழந்தைகள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் படிக்கச் செல்லாவிட்டால், அவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை பாழாகிவிடும். அதை யார் ஈடு செய்வார்கள்?” என்று கேட்டார்.
இத்தகைய வழக்குகளில் இழப்பீடு வழங்க ஏதேனும் வழிவகை உள்ளதா?
பிபிசியின் இந்தக் கேள்விக்கு அராரியா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் தீபக் குமார் வர்மா பதிலளிக்கையில், “சட்டத்தில் இழப்பீடு வழங்க எந்த இடமும் இல்லை” என்றார்.
அராரியாவைச் சேர்ந்த குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தின் கட்னியில் மட்டுமல்லாமல், ஒடிசாவின் கட்டாக்கிலும் 59 குழந்தைகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒடிசாவிலும் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்
அராரியா குழந்தைகள் நலக் குழுவின் தீபக் குமார் வர்மா, 59 குழந்தைகள் கட்டாக்கில் சிக்கித் தவிப்பதையும், புதன்கிழமை வரை அவர்களால் வீடு திரும்ப முடியாமல் இருப்பதையும் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், இன்னும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று வர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குக்காக வாதாடி வரும் ரமீஸ் ரேசா கூறுகையில், “ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் அந்தக் குழந்தைகளால் இன்னும் வர முடியவில்லை” என்றார்.
இந்தக் குழந்தைகளும் ஒடிசாவில் உள்ள ஒரு மதரஸாவிற்குச் சென்று கொண்டிருந்தவர்கள். அராரியாவில் உள்ள ரஜோகர் பஜார் அருகே வசிக்கும் இவர்கள், ஏப்ரல் 14 முதல் அங்கே சிக்கியுள்ளனர்.
சஞ்சௌலி கிராமத்தின் 3-வது வார்டில் வசிக்கும் சப்ரீன் பி.ஏ பட்டம் பெற்றவர். இவரது கணவர் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
சப்ரீனின் குழந்தை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தது.
சப்ரீன் கூறுகையில், “குழந்தை பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான், ஆனால் மார்க்கக் கல்விக்காக அவனை மதரஸாவிற்கு அனுப்பினோம். குழந்தை கட்டாக் ரயில் நிலையத்தில் பிடிபட்டான். குழந்தை ஒரு குழந்தைகள் பராமரிப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளான். அராரியா பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் ஏன் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்? குழந்தையிடம் ஆதார் அட்டை, கிராமத் தலைவர் எழுதிய ஆவணம் மற்றும் பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவை உள்ளன. ஆதார் மூலம் முழு விவரங்களையும் பெற முடியும்” என்றார்.
அதே வார்டைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான தப்ரேஸின் மகனும் ஒடிசாவில் உள்ள மதரஸாவிற்குச் சென்றார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ” இந்த முறை என் குழந்தையையும் அனுப்பினேன், ஆனால் அங்கே பிடித்துவிட்டார்கள். நாங்கள் முன்பதிவு செய்துதான் என் குழந்தையை அனுப்பினோம். அரசாங்கம் இங்கேயே ஒரு நல்ல மதரஸாவைத் திறந்தால், குழந்தை ஏன் வெளியே செல்லப் போகிறான்? நாங்கள் எந்த அழுத்தமும் இன்றி எங்கள் குழந்தைகளை அனுப்புகிறோம்” என்றார்.
குழந்தைகள் ஏன் மற்ற மாநில மதரஸாக்களுக்குச் செல்கிறார்கள்?
குழந்தைகள் ஏன் மற்ற மாநிலங்களில் உள்ள மதரஸாக்களுக்குச் செல்கிறார்கள் என்று கேட்பது இயல்பானது.
இஸ்லாமிய குழந்தைகள் தங்கள் உள்ளூர் மதரஸாக்களை விட மற்ற மாநிலங்களில் உள்ள மதரஸாக்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
வறுமை, உள்ளூர் மதரஸாக்களில் தங்கும் வசதி இல்லாதது மற்றும் குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஆகியவையே இதற்கு முதன்மையான காரணங்களாகும்.
பிஹாரில் மிகவும் பின்தங்கிய பகுதி சீமான்ச்சல். சீமான்ச்சலில் உள்ள பூர்னியா, கதிஹார் மற்றும் அராரியா ஆகிய மூன்று மாவட்டங்கள், நிதி ஆயோக் அமைப்பால் மாநிலத்தின் “முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களாக” அடையாளம் காணப்பட்ட 13 மாவட்டங்களில் அடங்கும்.
அதேபோல், 2025-26 பொருளாதார ஆய்வின்படி, மாநிலத்தின் 38 மாவட்டங்களில், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் அராரியா 37-வது இடத்திலும், கிஷன்கஞ்ச் 28-வது இடத்திலும், கதிஹார் 24-வது இடத்திலும் மற்றும் பூர்னியா 21-வது இடத்திலும் உள்ளன.
கல்வித் தரத்திலும் அராரியா, பூர்னியா மற்றும் கதிஹார் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தின் மிக பின்தங்கிய ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக உள்ளன.
தொழிலாளியான ஜலால் என்பவரும் தனது மகனை மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மதரஸாவிற்கு அனுப்புகிறார்.
அவர் கூறுகையில், “நாங்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களிடம் கட்டணம் செலுத்தப் பணம் இல்லை. குழந்தை கல்வி கற்று தனது கிராமத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகச் சிறிது கற்றுக்கொடுக்கிறோம். நாங்கள் எந்த அழுத்தமும் இன்றி மௌலானாவுடன் அவனை அனுப்பி வைக்கிறோம்” என்றார்.
அதே நேரத்தில், முகமது ஆசிப் ஒழுக்கம் தொடர்பான பிரச்னையை முன்வைக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “குழந்தைகள் மதரஸாவிலிருந்து மீண்டும் மீண்டும் ஓடிவிடுகிறார்கள். பத்து நாட்கள் அல்லது ஒரு மாதம் படித்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். இது போன்ற நேரங்களில், நாங்கள் கிராமத்து முஃப்தியைத் தொடர்பு கொண்டு குழந்தைகளை மதரஸாவிற்கு அனுப்பி வைக்கிறோம்” என்றார்.
பிஹாரில் உள்ள மதரஸாக்களில் தங்கும் வசதிகள் குறைவு
பட மூலாதாரம், BBC/Shahnawaz
பொதுவாக, ஈத் பண்டிகைக்குப் பிறகு, மதரஸாக்களில் சேர விரும்பும் குழந்தைகளை இந்த ஆசிரியர்கள் குழுக்களாக அழைத்துச் செல்கிறார்கள்.
இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்பதால், அவர்கள் பெரும்பாலும் இந்த ஆசிரியர்களுடன் தங்கள் குழந்தைகளை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த மதரஸாக்களில் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் தங்கும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பயணச்சீட்டுக்கான செலவை மட்டும் ஏற்றால் போதுமானது.
பிஹார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் இணையதளத் தகவலின்படி, மாநிலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளன, அவற்றில் 7,00,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இந்த மதரஸாக்களிலும் கல்வி இலவசம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிஹாரைச் சேர்ந்த குழந்தைகள் ஏன் வெளியே செல்கிறார்கள்?
பிஹார் மாநில குழந்தைத் தொழிலாளர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், இஸ்லாமிய குழந்தைகளின் கல்விக்காக நீண்டகாலமாகப் பணியாற்றி வருபவருமான முக்தாருல் ஹக் கூறுகையில், “பிஹாரில் மதரஸாக்கள் மூன்று வழிகளில் இயங்குகின்றன. முதலாவதாக, மதரஸா கல்வி வாரியத்தின் கீழ் உள்ள மதரஸாக்கள்; இவை தங்கும் வசதி கொண்டவை அல்ல. இரண்டாவதாக, பகல் நேரப் பள்ளிகளாக இயங்கும் சுதந்திரமான மதரஸாக்கள்; இவை ‘மதரஸா மக்தப்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
மூன்றாவதாக, ஹாபிஸ், ஆலிம், ஃபாசில், மௌலானா, ஹதீஸ் ஆகியவை கற்பிக்கப்படும் சுதந்திரமாக இயங்கும் மதரஸாக்கள். இந்த மூன்றாவது வகை மதரஸாக்களில் சிலவற்றில் மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளன” என்றார்.
உண்மையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெற்றோர்கள், தங்கும் வசதிகளை வழங்கும் மதரஸாக்களுக்கே தங்கள் குழந்தைகளை அனுப்ப விரும்புகிறார்கள்.
இதனால்தான் பிஹாரில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதரஸாக்களுக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயக்கமின்றி அனுப்புகிறார்கள்.
அராரியாவில் உள்ள இமாரத்-இ-ஷரியாவின் பிரதிநிதி அதீகுல்லா ரஹ்மானி கூறுகையில், “மதரஸாக்களில் இடவசதி குறைவாகவே உள்ளது. உதாரணமாக, ஒரு கிராமத்தில் 300 குழந்தைகள் இருந்து, மதரஸாவில் 200 பேருக்கு மட்டுமே தங்கும் வசதி இருந்தால், அனைவரையும் ஒரே அறைக்குள் அடைக்க முடியாது. எனவே, பெற்றோர்களும் மற்ற மதரஸாக்களைத் தேடுகிறார்கள். குழந்தைகளுக்குத் தங்கும் வசதி கிடைக்காதபோது, அவர்களை வெளியே அனுப்ப வேண்டியுள்ளது. வறிய நிலையில் உள்ள பெற்றோர் இதுபோன்ற சூழலில் வேறு என்ன செய்வார்கள்?” என்றார்.
மதரஸாக்களுக்குச் செல்லும் குழந்தைகள் இவ்வாறு தடுக்கப்படுவது அராரியா சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் அஃபாக் அன்வர் கூறுகையில், “இது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. இது முற்றிலும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது” என்றார்.
(கூடுதல் தகவல்: மத்தியப் பிரதேசத்தில் ஷுரைஹ் நியாசி மற்றும் மகாராஷ்டிராவின் லத்தூரில் உள்ள முஸ்தான் மிர்சா)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு