”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

Share

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவெக-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து. எங்க கட்சி எம்.எல்.ஏ எஸ்.காமராஜை காணவில்லை என ஆளுநரிடம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் புகார் அளித்தார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அடுத்த சில மணி நேரங்களில் காணவில்லை என சொல்லப்பட்ட எஸ்.காமராஜுடன் மீண்டும் ஆளுநர் மாளிகை வந்தார் தினகரன். தவெக குதிரை பேரம் நடத்துவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார் தினகரன். அத்துடன் எஸ்,காமராஜ், தினகரன் இருவரும் சேர்ந்து கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது எஸ்.காமராஜ் கொடுத்ததாக சொல்லி போலி கடிதத்தை தவெகவினர் கொடுத்துள்ளனர் என்றும் எஸ்.காமராஜ் ஆதரவு கடிதம் எழுதுவது போல் வந்த வீடியோ ஏஐ-யாக இருக்கலாம் என்றார் தினகரன்.

இதைத் தொடர்ந்து பேசிய காமராஜ் , நான் தவெகவுக்கு ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை என்றும் முடிந்தால் எங்களை போல் தவெக தலைவர் விஜய்யை செய்தியாளர்களை சந்திக்க சொல்லுங்கள் என்றார். சில தினங்களுக்கு முன் நடந்த இந்த விவகாரம் அரசியல் வட்டத்தில் பரபரப்பான விவாதங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக் கொண்ட எஸ்.காமராஜ் இன்று தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இதையடுத்து எஸ்.காமராஜை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கினார் டி.டி.வி.தினகரன். இதைதொடர்ந்து, சட்டமன்றத்தில் முதல்வரை புகழ்ந்து பேசினால் தப்பா என்று கேள்வி எழுப்பினார் எஸ்.காமராஜ்.

எஸ்.காமராஜ், டிடிவி தினகரன்

இந்த விவகாரம் பேசு பொருளாக இருந்து வரும் நிலையில் திரைமறைவில் நடந்தவை குறித்து உள்விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், “அமமுக-வில் மூன்று முறை எஸ்.காமராஜ்க்கு சீட்டும் கொடுத்து வேண்டிய உதவியும் செய்யப்பட்டது. அவருக்கு மன்னார்குடி வட்டத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல செல்வாக்கும் உள்ளது. இந்நிலையில், இந்தமுறை தேர்தலை சந்தித்த அவர் இது எனக்கு கடைசி வாய்ப்பு என்னை கைவிடாதீர்கள் என சென்டிமெண்ட்டாக செய்த பிரசாரம் எடுபட டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ-வானார்.

தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாததால் எஸ்.காமராஜிடம் ஆதரவு கேட்டனர். அப்போது அவர் அமைச்சர் பதவி கேட்டு தருவதற்கு ஒப்புக்கொண்ட பிறகு ஆதரவு கடிதம் கொடுத்து விட்டார். இதே போல் திமுக ஆதரவில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ரெடியாக அதிலும் இவருக்கு அமைச்சர் பதவி தருவதாக சொல்லப்பட அதிமுக-விற்கும் ஆதரவு அளித்தும் கடிதம் கொடுத்து விட்டார். இப்படியான சூழலில் தினகரனுக்கு பாஜக மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர எஸ்.காமராஜை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பிறகு நடந்தவை அனைவருக்கும் தெரிந்தவை.

இந்தசூழலில் தவெக ஆட்சி அமைக்க விஜய் முதல்வரானார். எம்.எல்.ஏ பதவி ஏற்காத நிலையில் ஆதரவு கடிதம் கொடுத்ததில் தனக்கு சிக்கல் எதுவும் எழலாம் என அமைதியாக இருந்தார் எஸ்.காமராஜ். நேற்று எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்று கொண்டவர் இனி தனக்கு எந்த சிக்கலும் வராது என அறிந்து இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டார். இப்போது போதுமான பெரும்பான்மை தவெகவுக்கு இருப்பதால் இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்களா என தெரியவில்லை.

தன்னிச்சையாக எஸ்.காமராஜ் தன் நிலைப்பாட்டை அறிவித்ததால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தினகரன் அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு சென்றார். இது குறித்து மன்னார்குடி நிர்வாகி ஒருவரிடம் தினகரன் பேச கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நான் அவரிடம் பேசுகிறேன் என்றவர் எஸ்.காமராஜிடம் பேசியிருக்கிறார். உங்களுக்கு கட்சி எவ்வளவு செய்துள்ளது நீங்கள் துரோகம் செய்யலாமா எனக் கேட்டுள்ளார். இதை நானும் கேட்கலாம் எவ்வளவு சம்பவத்தை பொறுத்து கொண்டு நான் விசுவாசமாக இருந்தேன். அவர்கள் சுய நலத்துக்காக என்னை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

எஸ்.காமராஜ்

இப்படியான வாய்ப்பு இனி எனக்கு கிடைக்குமா, ஏன் தினகரனே திரைமறைவில் இருந்து எனக்கான நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம், அவர் அப்படி செய்யவில்லை. அவருக்கு அவரது அரசியல் முக்கியம், எனக்கு என்னோட அரசியல் எதிர்காலம் முக்கியம். அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன். ஆளும்கட்சியில் இருப்பது தான் எனக்கு சேஃப் என சொல்லியிருக்கிறார். இது தினகரன் கவனத்திற்கு செல்ல அதன் பிறகே நடவடிக்கை பாய்ந்துள்ளது” என்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com