இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையிலிருந்து தீவிரமான பிரிவுகளுக்குக் கீழ் சென்றிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “நான் இங்கு இரண்டு நாள்கள் கூட தங்குவதில்லை, அதற்குள்ளாகவே எனக்கு தொற்று வந்துவிடுகிறது.” என வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில், இந்தியா ஓபன் 2026 பேட்மிண்டன் போட்டி 2026, ஜனவரி 13 முதல் ஜனவரி 18 வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிர சீனா, தென்கொரியா, டென்மார்க், தாய்லாந்து, ஜப்பான், மலேசிய, இந்தோனேசியா, தைவான் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சென் அதிரடியாக விலகியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “நான் ஏன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா ஓபன் போட்டியில் இருந்து விலகினேன் என்று பலரும் ஆர்வமாக (கேள்வி எழுப்பி) உள்ளனர். தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, ஒரு பேட்மிண்டன் தொடரை நடத்துவதற்கு இது தகுந்த இடம் என்று நான் நினைக்கவில்லை.
வரும் கோடைக் காலத்தில் (ஆகஸ்ட் மாதம்) டெல்லியில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும்போது, நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். இதன் விளைவாக, (கட்டாயப் போட்டியில் பங்கேற்காததற்காக) பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) மீண்டும் எனக்கு 5,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆண்டன்செனைத் தொடர்ந்து, மற்றொரு டேனிஷ் வீராங்கனையான மியா பிளிச்பெல்ட்டும், போட்டி நடைபெறும் இந்திரா காந்தி மைதானத்தின் சுகாதாரம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார். பயிற்சி மைதானங்கள் அழுக்காக இருப்பதாகவும், பறவைகளின் எச்சங்கள் ஆங்காங்கே காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் (BAI) பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா, “பயிற்சியின் போது கூறப்பட்ட குறைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. பிரதான அரங்கம் சர்வதேச தரத்தில் பராமரிக்கப்படுகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.