மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து பல்வேறு தீவிரவாத குழுக்கள் அல்காய்தா, ஐ.எஸ். அமைப்புகளின் உதவியோடு செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும் வழக்கமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோப்ரி பகுதியில் செயல்படும் மின்சார நிறுவனத்தில் ஐந்து இந்தியர்கள் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இதன்பிறகு, மற்ற பணியாளர்கள் பாமோகோ என்ற நகருக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களில் இரண்டு பேர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (27) மற்றும் முத்து கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் (36) ஆகியோர் ஆகின்றனர். இவர்களை மீட்டுத் தரவே பாரதப் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்கள் நவம்பர் 6ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில், இன்று வரை உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் இதே போன்று 3 இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.