30 வயதிற்கு கீழ்ப்பட்ட நோயாளிகளில் பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பு ஆகியவற்றின் கலவை கண்டறியப்படுவது மிகவும் அரிதாகும்.
ஏறக்குறைய ஒரு முட்டைப்போல எளிதில் உடையக்கூடிய அதிக கால்சியம் படிந்த வால்வில் ஒட்டுவதும், தையலிடுவதும் மிக கடினமானது; அதிக ஆபத்து வாய்ந்ததும் கூட.
சென்னை, அக்டோபர் 07, 2025 : ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் அவதிப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவரின் உயிரை ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனையாக சிம்ஸ் மருத்துவமனையின் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர்.

இரு மாதங்களாக கடுமையான சுவாசப் பிரச்சனைகள் இந்த இளைஞருக்கு இருந்திருக்கின்றன. கேரளாவில் பல மருத்துவமனைகளுக்கு சென்றபோது பளிங்கு பெருந்தமனி (கடுமையாக இறுகி, கடினமான மற்றும் எளிதில் நொறுங்கக்கூடிய முக்கிய இரத்தக்குழாய்) மற்றும் “ஒடுங்கிய பெருந்தமனி வால்வு” (இதயத்திலிருந்து இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற வால்வு குறுகியிருப்பது) என்ற இரண்டு கடுமையான இதயப் பிரச்சனைகள் அரிதாக ஒருங்கிணைந்திருப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டன. இதற்கான அறுவைசிகிச்சையின் சிக்கலான தன்மை மற்றும் உயிருக்கு அதிக ஆபத்துக்கான வாய்ப்பின் காரணமாக, கேரளாவின் உள்ளூர் மருத்துவமனைகள் அறுவைசிகிச்சையை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தன.