கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கில்: ஜடேஜாவின் பல அதிரடி சாதனைகள்! | shubman Gill next to Don Bradman as captain Jadeja impressive achievements

Share

இந்தியா – இங்கிலாந்து இடையே 5-வது டெஸ்ட் போட்டி இருதயத்துடிப்பைப் பாதிக்கும் த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடரை இந்திய அணி சமன் செய்ய வாய்ப்பு, அதே வேளையில் முதல் டெஸ்ட் போல் இலக்கை இங்கிலாந்து விரட்டி விடவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், முதல் டெஸ்ட் பிட்ச் போல் இந்தப் பிட்ச் இல்லை. இந்தப் பிட்சும் கொஞ்சம் அதன் சாரத்தை இழந்திருந்தாலும் இன்னும் கொஞ்சமாகவேனும் சத்து உள்ளது. பிரஷர் போட்டால் இங்கிலாந்தை சுருட்டி தொடரைச் சமன் செய்யலாம்.

ஆனால், இந்தத் தொடரில் பல சாதனைகளை இந்திய அணி செய்துள்ளது. அவை வருமாறு: ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியான இந்தத் தொடரில் இந்திய அணி மொத்தமாக 3,809 ரன்களைக் குவித்துள்ளது. 1989-ல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக 3,877 ரன்களைக் குவித்த பிறகு இதுதான் அதிகம்.

இந்தத் தொடரில் 8 முறை 300+ ஸ்கோர்களை இந்திய அணி எட்டியுள்ளது. எந்த ஒரு டெஸ்ட் தொடருக்கும் இது அதிக 300+ ரன்களாகும். அதே போல் 350 ரன்களை 8 முறை எடுத்துள்ளது. இதுவும் ஒரு சாதனையே.

ரவீந்திர ஜடேஜா 516 ரன்களை இந்தத் தொடரில் எடுத்துள்ளார். 6-ம் நிலையில் இறங்கும் ஒரு வீரர் எடுக்கும் 5-வது அதிகபட்ச மொத்த ரன்களாகும் இது. இந்திய பேட்டராகவும் இது ஒரு சாதனை. இதற்கு முன் விவிஎஸ் லஷ்மண் 2002-ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இதே டவுனில் இறங்கி 474 ரன்களை எடுத்ததை ஜடேஜா முறியடித்துள்ளார்.

அதே போல் ஜடேஜா 6 முறை 50-க்கும் அதிகமான ரன்களை இந்தத் தொடரில் எடுத்து இதே சாதனையைப் புரிந்த நெடும் பட்டியலில் இணைந்தார். அதுவும் 4 அரைசதங்கள் 2-வது இன்னிங்ஸில் வந்தது என்பதும் ஜடேஜாவை ஒரு நீள்நெடும் சாதனைப் பட்டியலில் இணைத்துள்ளது.

ஜடேஜாவின் இன்னொரு சாதனைத் துளி இங்கிலாந்து மண்ணில் ஜடேஜாவின் டெஸ்ட் ரன்கள் இதுவரை 1,131 என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 6-ம் நிலையில் இறங்கி எடுத்ததுதான் ஆச்சரியமான சாதனை. கிளைவ் லாய்ட் இதற்கு முன்னர் இதே டவுனில் இறங்கி 1,126 ரன்களை ஒரு தொடரில் எடுத்ததை முறியடித்து விட்டார் ஜடேஜா.

அதே போல் 6-ம் நிலை அல்லது அதற்கும் கீழே இறங்கி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட்டில் 10 அரைசதங்களை எடுத்தவர்களின் அரிதான பட்டியலிலும் ஜடேஜா இணைந்துள்ளார். ஒரு அயல்நாட்டு வீரர் இங்கிலாந்து மண்ணில் இந்த டவுனில் எடுத்த அதிகபட்ச அரைசதங்களாகும் இது. கிளைவ் லாய்ட் ஆஸ்திரேலியாவில் 10 அரைசதங்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் 12 அரைசதம் மற்றும் அரைசதம் தாண்டிய ஸ்கோர்களை எடுத்தவர்களில் சச்சின் டெண்டுல்கர் முதன்மையானவர்.

ஷுப்மன் கில் இந்தத் தொடரில் கேப்டனாக பேட்டிங்கில் எடுத்த 754 ரன்கள் டான் பிராட்மேன் கேப்டனாக இங்கிலாந்துக்கு எதிராக 1936-37-ல் எடுத்த 810 ரன்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள சாதனையாகும். கிரஹாம் கூச் இந்தியாவுக்கு எதிராக 1990 தொடரில் 752 ரன்கள் எடுத்த சாதனையையும் கில் முறியடித்து விட்டார்.

மொத்தம் இந்தியா இந்தத் தொடரில் 422 பவுண்டரிகள் 48 சிக்ஸர்கள் என்று 470 முறை எல்லைக் கோட்டைத் தாண்டி அடித்துள்ளனர். ஒரு டெஸ்ட் தொடரில் இத்தனை பவுண்டரிகள் இதுதான் முதல் முறை. 1993 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 451 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களுடன் 460 முறை எல்லைக் கோட்டைத் தாண்டி அடித்துள்ளனர்.

இந்திய அணி இந்தத் தொடரில் 12 சதங்களைப் பதிவு செய்துள்ளது. அதே போல் 5 இந்திய வீரர்கள் இந்தத் தொடரில் 400-க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளனர். ஜெய்ஸ்வால் நேற்றைய சதத்தின் மூலம் இந்தப் பட்டியலில் இணைந்தார். 1993 ஆஷஸ் தொடரில் 6 ஆஸ்திரேலிய பேட்டர்கள் 400+ ஸ்கோர்களை எடுத்தனர். 1964-65ல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் 5 பேர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 400+ ரன்களை எடுத்துள்ளனர். 3 இந்திய பேட்டர்கள் அதாவது, கில், ராகுல் ஜடேஜா 500 ரன்களைக் கடந்துள்ளனர். இதுவும் ஒரு சாதனைத் துளிதான்.

சையத் கிர்மானி (101), அமித் மிஸ்ரா (84) ஆகியோருக்குப் பிறகு ஆகாஷ் தீப் நைட் வாட்ச்மேனாக இறங்கி 66 ரன்களை எடுத்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com