ஓவல் டெஸ்ட்டில் பும்ராவுக்குப் பதில் ஆகாஷ் தீப்! | ENG vs IND fifth abd final test: Akash Deep to replace Bumrah in Oval Test

Share

இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் தொடங்குகிறது. இத்தகைய முக்கியமானதொரு போட்டியில் இந்திய அணியின் முன்னணிப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பதிலாக ஆகாஷ் தீப் அணிக்குள் வருகிறார்.

நீண்ட கால உடல்தகுதியை முன்னிட்டு பும்ராவின் முதுகைக் காயங்களிலிருந்து காக்கவும் இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக மருத்துவக் குழுவினர் பும்ராவிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு ஆச்சரியமில்லை என்றாலும் ஒரு முக்கியமான போட்டியில் அதுவும் இங்கிலாந்து பேசியப் பேச்சிற்கும் கடந்த போட்டியில் கடைசியில் ஜடேஜா, சுந்தரை அவமானப்படுத்தும் விதமாக ஹாரி புரூக்கை விட்டு பந்து வீசச் செய்ததற்கும் பழிதீர்க்கும் போட்டியில், தொடரை டிரா செய்ய வேண்டிய வெற்றியை நோக்கியப் போட்டியில், பும்ராவை உட்கார வைப்பது உண்மையில் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.

எட்ஜ்பாஸ்டனில் பும்ரா இல்லாமல் வெற்றி பெற்றதையடுத்து அவரை உட்கார வைக்கும் அதிர்ஷ்ட செண்டிமெண்ட் விளையாடுகிறது என்று நம்புவதற்கும் இடமுண்டு.

பும்ரா விளையாடி முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றது, பிறகு லார்ட்ஸில் தோற்றது, இதில் இரண்டிலும் பும்ரா ஆடினார். ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் 3வது இன்னிங்ஸில் இந்திய அணி எழுச்சி பெற்றதையடுத்து ஆட்டம் டிரா ஆனது.

இந்தத் தொடரில் மொத்தம் 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன, வரலாறு காணாத ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் பும்ராவின் பணிச்சுமை 3 டெஸ்ட் போட்டிகளில் என்றாலும் சுமை அதிகமே. ஓல்ட் டிராபர்டில் 33 ஓவர்களை பும்ரா வீசினார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு இன்னிங்ஸில் இவ்வளவு ஓவர்கள் வீசியதே இல்லை. முதல் முறையாக பந்து வீச்சிலும் அவர் சதமெடுத்தது ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட்டிலேயே.

இத்தகைய பிட்ச்களில் அவரை ஆடவிட்டு ஒழித்து விடக்கூடாது என்பது சரிதான், அவரும் மணிக்கு 140 கிமீ வேகப்பந்திலிருந்து வெகுவாகக் குறைத்தே வீசினார். நடப்புத் தொடரில் இவரும் சிராஜும் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சமநிலை எய்தியுள்ளனர். சிராஜ் மட்டும் என்ன பாவம் செய்தார் என்று தெரியவில்லை, ஒரு டெஸ்ட் கூட ஓய்வு கொடுக்காமல் ஆடவைக்கின்றனர். குடும்பங்களில் சம்பாதிக்கும் மூத்த மகனுக்கு தனி ட்ரீட்மெண்ட் நடக்குமே அதுதான் பும்ராவுக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகாஷ் தீப் காயம் காரணமாகக் கடந்த டெஸ்ட்டில் ஆடவில்லை, இப்போது காயத்திலிருந்து மீண்டு பிராக்டீஸ் கிரீன் டாப் பிட்ச்களில் அருமையாக ஸ்விங் செய்கிறார். எப்படியாயினும் சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஸ்தீப் சிங் இந்த முறை ஆடுவார்கள் என்றே தெரிகிறது.

ரிஷப் பந்த் ரூல்டு அவுட் என்பதால் அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பர்/பேட்டராக இணைவார். பொதுவாக மேகமூட்ட வானிலை ஆங்காங்கே பிட்சில் தெரியும் கொஞ்சமான புற்கள் நிச்சயம் இந்தப் போட்டியிலும் குல்தீப் யாதவ்வை களமிறக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com