கால் இறுதியில் பேயர்ன் மூனிச்சை வீழ்த்திய பிஎஸ்ஜி: அரை இறுதியில் ரியல் மாட்ரிட் உடன் மோதல் – Club WC | PSG beats Bayern Munich in quarter to play Real Madrid in semi fifa Club WC

Share

அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் மூனிச் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இந்த வெற்றியை பிஎஸ்ஜி சாத்தியப்படுத்தியது அபாரமானது. அது குறித்து பார்ப்போம்.

அமெரிக்காவில் கிளப் கால்பந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரை ஃபிபா நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. இதற்கான வெள்ளோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகள் பங்கேற்றுள்ளது இந்த முறைதான். இப்போது நான்கு அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புடன் அரை இறுதி வரை முன்னேறி உள்ளன.

பிஎஸ்ஜி vs பேயர்ன் மூனிச்: நேற்று (ஜூலை 5) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு அமெரிக்காவின் அட்லான்டாவில் இந்த ஆட்டம் தொடங்கியது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இரண்டு அணிகள் இதில் சமர் செய்தன. இரண்டு அணிகளும் வலுவான அணிகள். பேயர்ன் மூனிச் அணியில் ஹாரிகேன், மூசியாலா, முல்லர் உள்ளிட்ட வீரர்கள் இருந்தனர். இரண்டு அணிகளும் கோல் பதிவு செய்யும் முனைப்போடு களமாடின. மொத்த ஆட்ட நேரத்தில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் பிஎஸ்ஜி 45 சதவீதமும், பேயர்ன் மூனிச் 55 சதவீதமும் வைத்திருந்தன.

ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் டிசிரே துவே கோல் பதிவு செய்து அசத்தினார். அடுத்த சில நிமிடங்களில் அத்துமீறி களத்தில் விளையாடிய பிஎஸ்ஜி வீரர்கள் இருவருக்கு ரெட் கார்டு கொடுத்து நடுவர் வெளியேற்றினார். அதற்கான பதில் கோலை பதிவு செய்ய பேயர்ன் மூனிச் முயற்சி செய்தது. கூடுதலாக 6 நிமிடங்கள் ஆட்டம் நீட்டிக்கப்பட்டது. அதில் 90+6வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே கோல் பதிவு செய்தார். அக்ரஃப் ஹக்கிமி கொடுத்த பாஸை பயன்படுத்தி அதை கோலாக மாற்றி இருந்தார் டெம்பெல்லே. அது பேயர்ன் மூனிச் அணியின் வீரர்கள், ரசிகர்களை கலங்க செய்தது. இது இந்த தொடரில் தரமான ஆட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்று காலை (ஜூலை 6) நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பொருஷியா டார்ட்மண்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது. வரும் 10-ம் தேதி அன்று பிஎஸ்ஜி மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஃப்ளூமினெஸ் மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன. இதை இறுதி போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com