‘இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்’ – நேதன் லயன் ஆசை! | australian spinner nathan lyon wants to win test series in india

Share

செயின்ட் ஜார்ஜ்: இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

37 வயதான அவர், ஆஸ்திரேலிய அணிக்காக 138 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 556 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய அணிக்கு எதிரான உள்நாடு மற்றும் வெளிநாடு என 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இருப்பினும் இந்திய மண்ணில் அவர் இடம்பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

கடைசியாக கடந்த 2004-05 இந்திய சுற்றுப்பயணத்தில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. அந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை ஆடம் கில்கிறிஸ்ட் வழிநடத்தி இருந்தார். ரிக்கி பாண்டிங் காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில், அந்தத் தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. நான்காவது போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.

“இந்தியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென நான் எப்போதும் சொல்வது உண்டு. அடுத்த இரண்டு வருடங்களில் அந்த வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், அதை ஒவ்வொரு டெஸ்ட் போட்டியாக அணுக வேண்டியது அவசியம். இப்போது மேற்கு இந்தியத் தீவுகளில் நாங்கள் எங்கள் பணியை சரியாக செய்ய வேண்டும்.

இதன் பின்னர் கோடை காலத்தில் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளோம். நிச்சயம் மற்றுமொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான் விளையாடுவேன் என நம்புகிறேன்” என லயன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ‘Underneath The Southern Cross’ என்ற பாடலை பாடுவது வழக்கம். அதை அணியில் உள்ள வீரர் ஒருவர் லீட் செய்வார். ரோட் மார்ஷ் தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை லயன் வசம் மைக் ஹஸ்ஸி தனது ஓய்வின் போது கொடுத்தார். இந்த கொண்டாட்ட பாடலை 67 வெற்றிகளில் லயன் லீட் செய்துள்ளார். இப்போது அந்த பாடலை லீட் செய்யும் பணியை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி வசம் கொடுத்துள்ளார் லயன்.

கடந்த வாரம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பிறகு அந்த கொண்டாட்ட பாடலை பாட கேரி தலைமை வகித்தார். “அந்த பாடல் இனி நான் அணியில் ஒருவனாக இருந்து வெற்றி கொண்டாட்டத்தை ரசிப்பேன். இப்போதைக்கு நான் ஓய்வு பெறுகின்ற முடிவில் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எனது பணியை அணி வீரரின் வசம் ஒப்படைத்துள்ளேன். அவ்வளவுதான்” என லயன் கூறியுள்ளார். இதற்கு முன்பு 2023 ஆஷஸ் தொடரில் லயன் காயமடைந்த போது கொண்டாட்ட பாடலை பாடும் பொறுப்பை கேரி வசம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com