‘பேச்சே கிடையாது… வீச்சு தான்!’ – விமர்சனங்களை முதல் நாளே தகர்த்த ஷுப்மன் கில் | team india captain shubman gill scores century shuts criticism leeds test

Share

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இதன் மூலம் தன் மீதான விமர்சன கணைகளை அவர் தகர்த்துள்ளார்.

175 பந்துகளில் 127 ரன்கள் உடன் முதல் நாளை கேப்டன் ஷுப்மன் கில் நிறைவு செய்தார். இன்று மீண்டும் இரண்டாம் நாள் ஆட்டத்தை ரிஷப் பந்த் உடன் அவர் தொடர உள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆடுகளமும் அதற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் இந்திய அணியின் சாதனைகள்: 2017-க்கு பிறகு டெஸ்ட் தொடரின் முதல் நாளிலேயே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இருவர், சதம் பதிவு செய்தனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசினர். அதேபோல் 2017-க்கு பிறகு டெஸ்ட் தொடரின் முதல் நாளிலேயே இந்தியா 300+ ரன்களை கடந்ததும் இந்தப் போட்டியில்தான்.

76 டெஸ்ட் இன்னிங்ஸில் 3000+ ரன்களை கடந்து ரிஷப் பந்த் அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக குறைந்த இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய விக்கெட் கீப்பர்களில் பந்த் இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 63 டெஸ்ட் இன்னிங்ஸில் இந்த ரன்களை கடந்திருந்தார்.

2021-க்கு பிறகு இந்திய அணி விளையாடும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் நாளில் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்தப் போட்டியில் தான். இதை கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து படைத்தனர்.

இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் கண்ட 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். விஜய் மஞ்ரேக்கர், சந்தீப் பாட்டீல், சவுரவ் கங்குலி, முரளி விஜய் வரிசையில் இப்போது ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கேப்டனாக தனது முதல் இன்னிங்ஸில் சதம் கடந்து ஷுப்மன் கில்லும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய அணிக்காக விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் கேப்டனாக தங்களது முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்த 23-வது வீரர் ஆகியுள்ளார் கில்.

விமர்சனங்களை தகர்த்த ஷுப்மன் கில்: ரோஹித் மற்றும் கோலி ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அப்போது முதலே அவர் மீது தேசிய ஊடகங்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் விமர்சனங்களை வைத்தனர்.

அயலக மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக அவரது செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. இது அனைத்துக்கும் மேலாக ஷுப்மன் கில் குரல் வளத்தை குறிப்பிட்டு ‘எப்படி அவர் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜ் செய்வார்?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லும் வகையில் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி உள்ளார். ஆசியாவுக்கு வெளியே அவரது முதல் சதம் இது. அதுவும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இன்னிங்ஸிலேயே இந்த சதத்தை கடந்து தன்னை நோக்கி வீசப்பட்ட விமர்சன கணைகளை தகர்த்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com