இந்நிலையில் கொழுந்துவிட்டு எரியும் அடுப்பிலிருந்து விறகை பிடுங்கிக் கொள்வதைப் போல திடீரென்று ’கள் ஓர் உணவு, கள் இறக்குவது உரிமை’ என்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து மது விலக்கு போராட்டத்தை சீமான் நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறார். கள் மற்றும் சாராயம் போன்ற போதைப் பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட பல தவறுகள் நடப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால்தான் தடை செய்யப்பட்டது.
IMFL இந்தியாவில் உள்நாட்டு மற்றும் அந்நிய நாட்டு மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. அந்நிய நாட்டு மதுபானங்கள் எனினும் அதனிலும் உடலுக்கும் உயிருக்கும் பெரும் பாதிப்பு என்பதால் தான் மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ‘கள் உணவு’ என்று மிக மிகத் தவறான பிரசாரத்தை செய்வதுடன், தடையை மீறி ’கள்’ உற்பத்தி செய்வோம் என்பது அராஜகத்தை வெளிப்படுத்துவதாகும்.
கள் இறக்க அனுமதி இல்லை என அறிந்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெரியதாழையில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கள் இறக்க அனுமதித்தது ஏன்? கள் இறக்குவோரை கைது செய்தால் காவல் நிலையம் உடைத்தெறியப்படும் என அரிவாளைத் தூக்கிக் காட்டுகிறார். எனவே, காவல் நிலையங்கள் உடைத்தெறியப்படுவதற்கு முன்பாக கள் இறக்க அனுமதி கொடுத்துவிட்டு, அனைத்துக் காவல் நிலையங்களையும் காலி செய்து விட்டுப் போகப் போகிறீர்களா?

தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் மட்டுமல்ல; அனைத்துப் பகுதிகளிலும் பனை மரங்களும், கோடான கோடி தென்னை மரங்களும் உண்டு. எனவே நாளை முதல் யாருக்கும் பயப்படாமல் பனைமரம், தென்னை மரங்களில் கள் இறக்க முடிவு செய்துவிட்டால் காவல்துறை என்ன செய்யப் போகிறது எனத் தெளிவுபடுத்த வேண்டும்.
கள் உணவா? அது மதுவா? கள் இறக்குதல் சட்ட உரிமையா? சட்ட மீறலா? என்பதற்கு தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும். மேலும், சட்ட விதிமுறைகளை மீறி ’கள் ஓர் உணவு’ என தவறான பிரசாரம் செய்யும் சீமான் மற்றும் சட்டவிரோதமாக பெரியதாழையில் ’கள்’ இறக்கியதுடன், அரிவாளை எடுத்துத் தூக்கிக் காட்டி காவல்துறைக்குக் கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படவில்லையெனில், தமிழ்நாடு எங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக கடும் போராட்டம் வெடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.