இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
அதில், ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசிய கம்பீர், “ரோடு ஷோ மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை.
2007-ல் (டி20 உலகக் கோப்பை) நாங்கள் வெற்றிபெற்ற பிறகுகூட ரோட் ஷோ வேண்டாம் என்று நான் கூறினேன். மக்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. எப்போதும் இதைத் தொடர்ந்து கூறுவேன்.
இனிவரும் காலங்களில் நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். அரங்குகள் அல்லது மைதானத்தில் இதை செய்ய வேண்டும்.
நடந்தது மிகவும் துயரமானது. ஒவ்வொரு உயிரும் முக்கியம். நாம் அனைவரும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.
ரோடு ஷோ-வை நம்மால் கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்று எதுவும் நடக்காது என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.