ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி எனத் தீவிரவாதக் குழுக்களின் 9 முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

2016-ல் உரி தாக்குதலுக்கு பதிலடி:
இந்தத் தாக்குதலுக்கு முன்பாக 2016-ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் உள்ள உரி என்ற இடத்தில் இராணுவ முகாமுக்குள் புகுந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் கைக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 19 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பல தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ராணுவ ஆதரவுள்ள இடங்கள் என 6 முதல் 10-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.