ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “‘யார் கட்சி ஆரம்பித்தாலும் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இளைஞர்கள் சிலர் புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களின் பின்னால் செல்கின்றனர். அவர்களின் ஆசை எல்லாம் நிராசையாக போய்விடும். தமிழ்நாட்டில் திமுக-விற்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது. தமிழக முதல்வர், இப்பகுதி மீனவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி தருபவர். இந்த மாவட்டத்திற்கு என பல சிறப்பு திட்டங்களை ஒதுக்கி வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்கிறார்.
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய மத்திய அரசு 4034 கோடி ரூபாயினை தராமல் உள்ளது. இதனால் வேலை செய்தவர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால் ‘ஸ்டாலின்தான் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்ல’ என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிராக பேசுகிறார். காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை மோடி தான் பிரதமர். அவர் நினைத்தால் இலங்கை சிறையில் உள்ள 149 மீனவர்களையும் விடுதலை செய்ய முடியும். 5-ம் தேதி இலங்கை செல்கிறார். அவர் நம் மீனவர்களை விடுவிக்கச் செல்கிறாரா அல்லது இலங்கை அதிபரால் ரத்து செய்யப்பட்ட தனது நண்பர் அதானியின் திட்டங்களை மீண்டும் பெற்றுத்தர செல்கிறாரா என்பது அவரது பயணத்திற்கு பின் தெரிந்துவிடும்.
