அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை அணியில் தடை நீங்கி ஹர்திக் பாண்டியா களமிறங்குவதால் அந்த அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினர். இந்த ஆட்டத்தில் தடை காரணமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. தற்போது தடை முடிந்து அவர், திரும்பியிருப்பது அணியின் சமநிலையை அதிகரிக்கச் செய்யக்கூடும். மேலும் அந்த அணி ஒருவார ஓய்வுக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதில் சூர்யகுமார் யாதவின் டி 20 போட்டிகளில் கடந்த ஒரு வருடமாகவே பார்மின்றி தவித்து வருகிறார். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய பார்மும் நிலைத்தன்மையுடன் இல்லை. இவர்கள் இருவரும் விரைவில் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் பெரிய அளவிலான ரன் வேட்டை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.
தொடக்க வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரியான் ரிக்கெல்டனும் முதல் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். இன்றைய ஆட்டத்தில் அவர், தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளும் பட்சத்தில் மும்பை அணிக்கு சிறந்த அடித்தளம் கிடைக்கும். மேலும் பாண்டியாவின் வருகை பேட்டிங், பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடும். இறுதிக்கட்ட ஓவர்களில் பாண்டியா வைடு யார்க்கர் வீசும் திறன் கொண்டவர். இது ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கக்கூடும்.
சுழற்பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். ஆனால் சேப்பாக்கம் ஆடுகளம் போன்று அகமதாபாத் ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கக்கூடியது இல்லை. இதனால் விக்னேஷ் புதூரை அணி நிர்வாகம் எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஷுப்மன் கில் தலைமையிலான அகமதாபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் வீழ்ந்திருந்தது. 244 ரன்கள் இலக்கை துரத்திய அந்த ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் வைடு யார்க்கருக்கு எதிராக திணறியதால் வெற்றியை பறிகொடுத்தது. இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 475 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக அமைந்துள்ள அகமதாபாத் ஆடுகளத்தில் மீண்டும் ஒரு முறை ரன் வேட்டை நிகழ்த்தப்படக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க குஜராத் அணியின் பந்து வீச்சு பலவீனமாக காணப்படுகிறது. முகமது சிராஜ், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்களை தாரைவார்த்தார். அவரை தவிர பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான இந்திய பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை. பிரசித் கிருஷ்ணா, அர்ஷத் கான் ஆகியோரிடம் இருந்தும் சிறந்த திறன் வெளிப்படவில்லை.
காகிசோ ரபாடா, ரஷித் கான் ஆகியோரும் கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை வழங்கியிருந்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சு துறையை பலப்படுத்தும் விதமாக ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கில் சாய்சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். ஷெர்ஃபேன் ரூதர்போர்டு கடந்த ஆட்டத்தில் வைடு யார்க்கர், தாழ்வாக வீசப்பட்ட ஃபுல்டாஸ் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்பட்டார். இதனால் இன்றைய ஆட்த்தில் அவருக்கு பதிலாக கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர், சுழற்பந்து வீச்சிலும் கைகொடுக்கக்கூடியவர்.