அந்த 2015 உலகக்கோப்பையிலெல்லாம் நியூசிலாந்துதான் Talk of the Town. மெக்கல்லமின் கேப்டன்சியில் துடிப்பான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தனர். இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிவிட்டதால் இந்திய ரசிகர்கள் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றெல்லாம் மெக்கல்லம் கேட்டிருந்தார். அதேமாதிரி, நியூசிலாந்துக்கு பெரிய ஆதரவும் இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா முன்பு எதுவும் பலிக்கவில்லை. மிக எளிதாக அந்த இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியா வென்று சென்றது. 2023 உலகக்கோப்பையை மறக்க முடியுமா? ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. ஆஸ்திரேலிய அணி தன்னுடைய முதல் லீக் போட்டியிலேயே இந்தியாவிடம் வீழ்ந்திருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவே குரங்கு பெடல் அடித்துதான் வென்றிருந்தனர். இந்திய அணி இருந்த ஃபார்முக்கு இந்த முறை கட்டாயம் வெல்வார்கள் என்றே தோன்றியது. ஆனால், பேட் கம்மின்ஸ் சொன்னதைப் போலவே ஒட்டுமொத்த இந்தியாவையும் அமைதியாக்கிவிட்டார்.
கடந்த டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் ஆடிய ஆட்டம் நியாபகம் இருக்கிறதா? ஆஸ்திரேலியாவை அரையிறுதி பக்கம் வர விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார்.
‘நடப்பு சாம்பியன்ஸ் டிராபி!’
அரையிறுதில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்றவுடன், ‘ஐ.சி.சி தொடர்களில் ஆஸ்திரேலியாவுக்கென ஒரு வளமையான பாரம்பரியம் இருக்கிறது.’ என ரோஹித் பேசியிருந்தார். ரோஹித் சொன்ன வளமையான பாரம்பரியம் மேலே குறிப்பிட்டதுதான். ஐ.சி.சி தொடர்களின் நாக் அவுட்ஸில் ஆஸ்திரேலியா எப்போதுமே 10x பலத்துடன் இருக்கும். இப்போது வந்திருப்பது இரண்டாம் கட்ட அணிதான். ஆனால், இவர்களுக்கும் அது பொருந்தும். இந்த அணியை வைத்துக் கொண்டுதான் இங்கிலாந்துக்கு எதிராக 350+ சேஸிங்கை செய்து முடித்தார்கள். இந்த அணியை வைத்துக் கொண்டுதான் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள். ஆக, ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியையும் குறைத்து மதிப்பிடவே முடியாது.