லாகூரில் இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி என்று பாப்புலர் ஊடகங்கள் தலைப்பு வைத்து எழுதும் காலம் முடிந்து விட்டது. இனி இங்கிலாந்து வென்றால் எதிரணி அதிர்ச்சித் தோல்வி என்றுதான் டைட்டில் வைக்க வேண்டும். அல்லது, இங்கிலாந்து அதிர்ச்சி வெற்றி என்றுதான் எழுத வேண்டும். அந்த அளவுக்கு இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டையும், குறிப்பாக துணைக் கண்டத்தில் ஆடுவதையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.
ஆப்கான் கேப்டன் நேற்று மிகத் துல்லியமாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்தின் 350 ரன்களை விரட்டிய அதே பிட்ச்தான் இதுவும். இருந்தும் இங்கிலாந்தினால் 325 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை. 2023 உலகக் கோப்பையில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தானின் 285 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போது மீண்டும் ஒரு ஐசிசி தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறை ஆப்கனிடம் தோல்வி அடைந்துள்ளது இங்கிலாந்து.
ரவி சாஸ்திரி அருமையாக ஒரு வார்த்தை சொன்னார், ‘துணைக் கண்ட கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவரை இது போன்ற தோல்விகளை ஜீரணித்துத்தான் ஆக வேண்டும்’ என்று இங்கிலாந்தைத் தாக்கினார்.
இங்கிலாந்து நேற்று அணி ஆப்கானிஸ்தானை 37/3 என்ற நிலையில் இருந்து எழும்ப விட்டது. ஆனால் இப்ராஹிம் சத்ரான் ஆடிய இன்னிங்ஸ் உண்மையில் ஒரு மகத்தான ஐசிசி தொடர் இன்னிங்ஸ் என்றால் மிகையாகாது. கோலிகளையும் ரூட்களையும், ஸ்மித்களையும் பேசும் காலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்ரஹிம் ஜத்ரான் மிக அருமையான ஒரு இன்னிங்ஸைக் கட்டமைத்தார்.
அதாவது, ஜோப்ரா ஆர்ச்சரின் ஆக்ரோஷத்தில் 3 விக்கெட்டுகளை பவர் ப்ளேயிலேயே இழந்து விட்டது. ஆனால் அதன் பிறகு கோட்டை விட்டது இங்கிலாந்து. எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. பட்லரின் கேப்டன்சி ஏதோ ஒரு விதத்தில் பிற்கால தோனியை நினைவூட்டியது.
ஹஸ்மத்துல்லா ஷஹீதியும், இப்ராஹிம் ஜத்ரானும் உறுதியின் திலகமாக 103 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது உண்மையில் இங்கிலாந்துக்கான பேட்டிங் பாடமே. கடைசியில் முகமது நபி 24 பந்துகளில்ஆடிய இன்னிங்ஸும் அவர்களது உறுதிப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஜத்ரான் பென் டக்கெட்டின் 165 ரன்கள் ரெக்கார்டை 2 நாட்களில் முறியடித்து புதிய சாம்பியன்ஸ் டிராபி சாதனையைப் படைக்கும் விதமாக 146 பந்துகளில் 12 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 177 ரன்களை விளாசினார். ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸ்களில் இதற்கு டாப் 3 இடங்களில் ஒன்றை தாரளமாக அளிக்கலாம். கடைசி 10 ஓவர்களில் 113 ரன்கள் விளாசப்பட்டது. அனைத்து இங்கிலாந்து பவுலர்களும் சாத்தி எடுக்கப்பட்டனர்.
இங்கிலாந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த விதம்: முதலில் பில் சால்ட் நேராக வந்த பந்தை அசிங்கமாக மிட் விக்கெட் மேல் தூக்கி அடிக்கும் ஒரு தெரு கிரிக்கெட் ஷாட்டை ஆடி பவுல்டு ஆனார். பென் டக்கெட் மீண்டும் அபாயகரமாகத் திகழ்ந்தார், ஆனால் அவர் 38 ரன்களில் ரஷீத் கான் பந்தில் ஏமாந்தார். ஃபுல் லெந்த் பந்தை கால்காப்பில் வாங்கினார், பிளம்ப் இன் ஃப்ரண்ட். ஆனால் நடுவர் கொஞ்சம் விளையாடப் பார்த்து அவுட் இல்லை என்றார், ஆனால் ரிவியூ செய்தது சரியாக அமைந்து டக்கெட் காலி.
ஜேமி ஸ்மித் அலட்சியமாக முகமது நபியைக் கருதி இறங்கி வந்து சுற்றப்போக பந்து பாயிண்டில் கேட்ச் ஆனது. இதுவும் அந்த சமயத்தில் தேவையில்லாத ஷாட். ஹாரி புரூக் மைதானத்தில் எங்கு வேண்டுமானாலும் அடித்து அனுப்ப வேண்டிய பந்தை எப்படி பவுலர் நபி கையிலேயே கேட்ச் ஆகுமாறு அடித்தார் என்பது இங்கிலாந்தின் அலட்சிய பேட்டிங்கிற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.
ஜாஸ் பட்லர் ஒருமுறை பிளம்ப் இன் ஃபிரண்ட், சரியான எல்.பி. ஆனால் நடுவர் மீண்டும் விளையாடும் விதமாக நாட் அவுட் என்றார். அது கடைசியில் அம்பயர்ஸ் கால் என்று ஆனது. அப்படி என்றால் நடுவர் அவுட் கொடுத்திருக்க வேண்டிய பந்துதான் அது. இந்த வாய்ப்பையும் பட்லர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் அஸ்மத்துல்லா ஓமர்சாயின் அட்டகாசமான நல்ல திசையில், பட்லர் உடலுக்கு நேராக வீசிய ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை சரியாக அடிக்க முடியாமல் கேட்ச் ஆனார்.
ரொம்ப நேரமாகக் கொண்டு வராத குல்பதின் நயீப் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீச டெம்ப்ட் ஆன லிவிங்ஸ்டன் கட் ஆட முயன்று எட்ஜ் செய்து வெளியேறினார். ஜோ ரூட் நின்றிருந்தால் நிச்சயம் இங்கிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றிருப்பார், ஆனால் அவருக்கும் டெம்பரமெண்ட் இல்லை. அப்போதுதான் ஓமர்சாய் அட்டகாசமாக ஒரு ஷார்ட் பிட்ச் எகிறு பந்தை வீசினார். நல்ல முயற்சியுடன் வீசிய பந்து இது. ரூட் தேர்ட் மேன் மேல் அடிக்க நினைத்து எட்ஜ் செய்து வெளியேறினார். அதோடு இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பும் அரிதானது.
கடைசியில் ஜேமி ஓவர்டன் ஓமர்சாயின் அட்டகாசமான ஸ்லோ பந்திற்கு அபாயகரமான 32 ரன் இன்னிங்சில் முடிந்தார். ஆக்ரோஷம் காட்டிய ஜோப்ரா ஆர்ச்சர் ஃபரூக்கியின் ஸ்லோ பந்தை நேராகக் கையில் அடித்து முடிந்தார். ஆதில் ரஷீத் கடைசி விக்கெட்டாக ஓமர்சாயின் 5வது விக்கெட்டாக வெளியேற, பேட்டிங் சூப்பர் ஸ்டார் இப்ரஹிம் ஜத்ரானே கேட்சைப் பிடித்து இங்கிலாந்து தோல்வியை நிர்ணயித்தார்.
ஆப்கானின் இந்த வெற்றி இன்று டிரெண்ட் ஆகி வருகிறது. இங்கிலாந்து தோற்ற பிறகு மிகவும் சோர்ந்து போய்விட்டனர். ஜோ ரூட் அழுதே விட்டார். என்ன செய்வது இங்கு வந்து ஆடுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை எவ்வளவு முறைதான் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது?