நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி, பாலியல் வன்கொடுமை, கருகலைப்பு ஆகிய புகார்களை கொடுத்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், `விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீஸாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராகும் நிலையில் அவரிடம் பரிசோதனை நடத்தவும் காவல்துறை திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரின் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “சீமான் முன்னரே திட்டமிட்ட கட்சி தொடர்பான பணிகளின் பயணத்தில் இருப்பதால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்தப் புகார் குறித்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” எனக் கடிதம் கொடுத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியிருக்கின்றனர். அந்த நோட்டீஸை சீமான் வீட்டில் இருந்த இருவர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சீமான் வீட்டில் இருந்த காவலாளியிடம் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை காவல்துறையினர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமானின் காவலாளிக்கும் – காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சீமானின் காவலாளியைக் கைது செய்திருக்கின்றனர். மேலும் ஒட்டப்பட்ட நோட்டீஸை கிழித்த நபரையும் போலீஸார் பிடித்துச் சென்றனர்.
இதனிடையே, வீட்டில் இருந்த சீமானின் மனைவி கயல்விழி, காவலாளியின் செயலுக்கு போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது.