இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வான்கடே மைதானத்துக்கு நேரில் வந்தார். கடந்த போட்டியின் முடிவில் 1 – 3 என தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஓப்பனிங் வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவுடன் பார்ட்னர்ஷிப் போட்ட அபிஷேக் சர்மா, சிக்ஸ் ஃபோர் என வானவேடிக்கைக் காட்டினார். அணியின் ஸ்கோர் 136 ரன்களாக உயர்ந்தபோது திலக் வர்மா 24 ரன்களில் அவுட்டனார். அப்போது, 32 பந்துகளில் 10 சிக்ஸர் உட்பட 94 ரன்களுடன் களத்தில் நின்ற அபிஷேக் சர்மாவுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். அடில் ரஷீத் வீசிய 10 ஓவரில் அபிஷேக் சர்மா முதல் நான்கு பந்துகளில் 0, 0, 4, 1 என அடித்து 99 ரன்களை எட்டினார்.