சென்னை: நடப்பு மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
114 ரன்களை விரட்டிய இந்திய அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்திய அணியின் ஓபனர் ஜி.கமலினி 50 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இன்னிங்ஸை ஓபன் செய்த திரிஷா கோங்கடி 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அரை இறுதிப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. இருப்பினும் ஆயுஷி ஷுக்லா, பருணிகா சிசோடியா மற்றும் வைஷ்ணவி சர்மா என இந்திய சுழற்பந்து வீச்சு வீராங்கனைகள் இங்கிலாந்தை அப்படியே சுருட்டி விட்டனர். மூவரும் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தினர். 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இங்கிலாந்து.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பருணிகா மற்றும் வைஷ்ணவி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது.