ஆஸ்திரேலியாவின் பிரபலமான லீகான பிக்பேஸ் லீக் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னி தண்டர்ஸ் அணிக்கும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி சுலபமாக வென்று சாம்பியனாகியிருக்கிறது. மிட்செல் ஓவன் என்கிற வீரர் அதிரடியாக சதமடித்து ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் சாம்பியனாக காரணமாக இருந்தார். இந்த மிட்செல் ஓவன் ஹோபர்ட் அணியின் தீவிர ரசிகர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயதில் மைதானத்தில் ரசிகர்களோடு ரசிகராக ஓவன் ஹோபர்ட் அணிக்காக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில் ஹோபர்ட் அணி இதுவரை சாம்பியன் ஆனதே இல்லை. முதல் முறையாக இப்போதுதான் சாம்பியனாகியிருக்கிறது. அதுவும் ரசிகனாக இருந்து வீரராக மாறிய ஓவனால்.
மிட்செல் ஓவன் ஒரு மிடில் ஆர்டர் பேட்டர்தான். கடந்த நான்கு சீசன்களாக ஹோபர்ட் அணிக்காக மிடில் ஆர்டரில்தான் இறங்கியிருக்கிறார். ஒரு சில போட்டிகளில் மட்டும்தான் ஆடியிருக்கிறார். 79 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அந்த மிட்செல் ஓவனை இந்த சீசனில் அணியின் கேப்டன் நேதன் எல்லீஸ் ஓப்பனராக்கிவிட்டார். இதுதான் மிட்செல் ஓவனின் கரியரின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த சீசனில் ஹோபர்ட் அணிக்காக ஓவன் ஓப்பனிங் இறங்கி கலக்கிவிட்டார். ஓப்பனராக களமிறங்கிய இரண்டாவது போட்டியிலேயே சதமடித்தார். இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்திருந்த வீரரும் அவர்தான். 452 ரன்களை 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். இறுதிப்போட்டியில் 183 ரன்களை சேஸ் செய்த போதும் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்களுடன் 108 ரன்களை எடுத்திருந்தார். ஓவனின் ஆட்டத்தால்தான் சிட்னி தண்டர்ஸூக்கு எதிராக எந்த சிரமமும் இல்லாமல் ஹோபர்ட் அணியால் 15 ஓவர்களிலேயே வெல்ல முடிந்தது.

ரசிகனாக தன்னுடைய விருப்பமான அணிக்காக மனதிலிருந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த ஓவன், ஒரு வீரராக அவதாரமெடுத்து தன்னுடைய அணியை முதல் முறையாக சாம்பியனாக்கிவிட்டார். ஓவனுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
மைதானத்தில் கூடியிருந்த 15000 க்கும் அதிகமான ரசிகர்களும் ‘ஓவன்…ஓவன்..’ என ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தனர். ‘இது அற்புதமான தருணம். என்னுடைய சிறுவயது கனவு நிறைவேறியதை போல இருக்கிறது. இப்போது என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.’ என நெகிழ்ந்திருக்கிறார் ஓவன்.

சிறுவயதில் எல்லாருக்குமே பலவிதமான ஃபேண்டஸியான கனவுகள் இருந்திருக்கும். அதில் மிக சுவாரஸ்யமானது. நமக்கு பிடித்தமான அணியில் பிடித்தமான ஜாம்பவான்களோடு கிரிக்கெட் ஆடி அணியை வெல்ல வைப்பதை போன்றது. அந்த பேண்டஸி கனவைத்தான் ஓவன் இப்போது நிஜமாக்கியிருக்கிறார். வாழ்த்துகள் ஓவன்!