கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்… தேனியில் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்..!

Share

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு சாலையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 19 துறைகளில் 275 மாணவ – மாணவிகள் கால்நடைக் கல்வி பயின்று வருகின்றனர். முதல்வர், பேராசிரியர்கள் என 49 பேர் பணியாற்றி வருகின்றனர்.

சோதனை

இந்நிலையில், தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் பொன்னுதுரைக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த கல்லூரி நிர்வாகம் தேனி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.

மேலும் வகுப்பறைகளில் இருந்த மாணவ – மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தேனி வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் வெற்றி உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாக அலுவலகம், வகுப்பறைகள், ஆராய்ச்சி நிலையம், விடுதிகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர்.

விசாரணை

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது எனத் தெரியவந்தது. இதனால் மாணவ – மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் என அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வீரபாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com