2015-ம் ஆண்டு இதே ஜனவரி 23-ம் தேதி இலங்கை அணியை நியூஸிலாந்து வென்ற விதம் பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய ஒருநாள் போட்டி டுனெடினில் நடைபெற்றது.
இலங்கை அணிக்கு லாஹிரு திரிமானே கேப்டன், அணியில் தில்ஷான், சங்கக்காரா, ஜெயவர்தனே போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். நியூஸிலாந்து அணிக்கு பிரெண்டன் மெக்கல்லம் கேப்டன். இது 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 5-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற திரிமானே முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தார். முதல் பந்திலேயே அதிரடி மன்னன் மார்ட்டின் கப்தில், சங்கக்காராவிடம் கேட்ச் ஆகி குலசேகராவிடம் டக் அவுட் ஆனார். மெக்கல்லம் 25, கேன் வில்லியம்சன் 26, ராஸ் டெய்லர் 20, கோரி ஆண்டர்சன் 8 என்று வரிசையாக நடையைக் கட்டினர், 20 ஓவர்களில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் என்று திக்கித் திணறிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் எதிர்பாராத ஒன்று நடந்தது. யாரும் எதிர்பார்க்கவே முடியாத திருப்பம் ஏற்பட்டது. கிரீசில் நியூஸிலாந்தின் கிராண்ட் எலியட்டும் லூக் ரோங்கியும் இணைந்தனர். அதன் பிறகு நடந்தது ரண களம். இருவரும் சேர்ந்து 180 பந்துகளில் 6-வது விக்கெட் கூட்டணியாக 267 ரன்களை விளாசித்தள்ளினர். அது உலக சாதனையாக அமைந்தது. இலங்கை வீரர்கள் மைதானம் நெடுக ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. லூக் ரோங்கி வலது கை பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
லூக் ரோங்கி 99 பந்துகளில் 14 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 170 ரன்களை விளாசித் தள்ளினார். எதிர்முனையில் கிராண்ட் எலியட் 96 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து இருவருமே நாட் அவுட். 6-வது விக்கெட்டுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்புக்கான உலக சாதனையாகத் திகழ்ந்து வருகிறது.
ரோங்கியின் முதல் சதமான இதில் முதல் 100 ரன்கள் 74 பந்துகளில் வந்தது. அடுத்த 25 பந்துகளில் 70 ரன்கள், எதிர்பாரா அதிரடி. சுரங்க லக்மல் 10 ஓவர்களில் 93 ரன்களை வாரி வழங்கினார். நுவான் குலசேகரா 10 ஓவர் 73 ரன்கள் கொடுத்தார். லஷித் மலிங்கா இல்லாததன் பலனை டெத் ஓவர்களில் இலங்கை அணி அனுபவித்தது. ரோங்கி அதிரடியைத் துவக்கி வைத்தது ஜீவன் மெண்டிஸ் வந்து அரைக்குழியில் இரண்டு பந்துகளை தேங்காய் உடைக்க பந்து மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் போய் விழுந்தது. அதிலிருந்து ரோங்கி திரும்பியே பார்க்கவில்லை, மைதனம் நெடுக சிதறடித்தார்.
ஒரு கட்டத்துக்குப் பிறகே இலங்கை பந்து வீச்சு நெட் பவுலிங் போல் ஆக்கப்பட்டது. ஸ்வீப் ஷாட்களை பெரிய அளவில் பயன்படுத்தினர். ஸ்கோர் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டில் இருந்து 50 ஓவர்களில் 360 ரன்களை எட்டியது. பெரேரா மட்டுமே 10 ஓவர்களில் 49 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி ரோங்கி – எலியட் பார்ட்னர்ஷிப் சேர்ந்த உலக சாதனை 267 ரன்களுக்கு 15 ரன்கள் குறைவாக எடுத்து 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திலகரத்னே தில்ஷான் மட்டுமே 106 பந்துகளில் 116 ரன்கள் அடித்தார். போல்ட் 4 விக்கெட்டுகள், ஜார்ஜ் எலியட் பவுலிங்கிலும் 2 விக்கெட்டுகள். டிம் சவுதி 2 விக்கெட் என்று இலங்கை அணி கையிலிருந்த போட்டியை திடீரெனத் தடுமாறி பாதை விலகிய பந்து வீச்சினாலும் மோசமான பீல்டிங்கினாலும் கோட்டை விட்டது.