முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 41.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 68.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சவுத் ஷகீல் 84, முகமது ரிஸ்வான் 71 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 25.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோமல் வாரிக்கன் 31, ஜெய்டன் சீல்ஸ் 22, குடகேஷ் மோதி 19 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான நோமன் அலி 5, சஜித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினர். 93 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 31 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது.
ஷான் மசூத் 52, முகமது ஹுரைரா 29, பாபர் அஸம் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். கம்ரன் குலாம் 9, சவுத் ஷகீல் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.