ராஜ்கோட்: அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 129 பந்துகளில் 154 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 80 பந்துகளில் 135 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 31.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3, தனுஜா கன்வார் 2, திடாஸ் சாது, சாயாலி சாட்கரே, மின்னு மணி ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். இந்திய மகளிர் அணி 435 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்து சாதனை படைத்தது.