19 வயதுக்குட் உட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – குஜராத் அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் குஜராத் 380 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 150.1-வது ஓவரில் 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஆர்.கே.ஜெயந்த் 91, ஆர்.பிரவீன் 42 ரன்கள் விளாசினர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அசத்தியது.
இதையடுத்து விளையாடிய குஜராத் அணி 25.1 ஓவர்களில் 7விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து தமிழ்நாடு அணிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறைந்த பட்சம் 40 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணி 21 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலை பெற்றதன் மூலம் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. கூச் பெஹர் டிராபியில் கடைசியாக தமிழ்நாடு 1991-92-ம் ஆண்டு உத்தரபிரதேச அணியுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்டிருந்தது.