கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா? மதுவுக்கு எதிராக தன் தோப்பிலிருந்த 1,000 தென்னை மரங்களை வெட்டினார். பகுத்தறிவுவாதிதானே அவர்?

என் தோட்டத்தில் கள் இறக்க அனுமதியில்லை எனச் சொல்லியிருக்கலாமே?! அதற்காக யாராவது மரத்தை வெட்டுவார்களா? அதுதான் பகுத்தறிவா?” என்று பேசியிருந்தார். அந்தப் பேச்சுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில் இன்று புதுச்சேரிக்கு வந்த சீமானிடம், `பெரியார் குறித்து நீங்கள் பேசிய பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் ஆதாரம் கேட்டிருக்கிறார்களே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய சீமான், “அனைத்து ஆதாரங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டால் எப்படி தர முடியும். 3,000 ஆண்டுகளாக இருக்கும் உங்கள் தமிழ்த்தாய் உங்களையெல்லாம் படிக்க வைத்தாரா ? அப்படீன்னு கேக்கறீங்க இல்ல. அப்படியென்றால் 3,000 ஆண்டுகளாக படிக்காமல்தான் கம்பன், கபிலன், இளங்கோ வந்தானா ?