
டெஸ்ட்டை பிரபலப்படுத்தும் வகையில்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒன்றை ஐ.சி.சி அறிமுகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளில் ஒரு அணி ஆடும் தொடர்களின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். சுழற்சியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் ஆடும்.
இந்த முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஐ.சி.சி யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி, டெஸ்ட் ஆடும் அணிகளை Division 1, Division 2 என இரண்டாக பிரிக்கும் முடிவில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த முறைக்கே ‘Two Tier Test System’ என பெயர் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். Division 1 இல் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் Division 2 வில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கான சுழற்சியின் முடிவில் முதல் டிவிசனில் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாம் டிவிசனுக்கு மாற்றப்பட்டு, இரண்டாம் டிவிசனில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் டிவிசனுக்கு மாற்றப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
2027 வரைக்குமான போட்டி அட்டவணைகளை ஐ.சி.சி வெளியிட்டுவிட்டதால் அதன்பிறகு இந்த ‘Two Tier’ முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஐ.சி.சி யின் சேர்மன் ஆகியிருக்கும் ஜெய்ஷா ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளுடன் இந்த முறையை அமல்படுத்துவது குறித்து கலந்தாலோசித்திருக்கிறார். அதனால்தான் கிரிக்கெட் உலகில் திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.