கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட்டில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இதன் மூலம் இந்த லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற அடையாளத்தை அவர் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூனில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இருப்பினும் எஸ்ஏ20 லீக்கில் விளையாடுவதாக சொல்லி இருந்தார். அதன்படி பார்ல் ராயல்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்த அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த லீக் கிரிக்கெட்டின் மூன்றாவது சீசன் நாளை (ஜன.9) தொடங்குகிறது. டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், எம்ஐ கேப் டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என ஆறு அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. இதில் சன்ரைசர்ஸ் அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பார்ல் ராயல்ஸ் அணியில் தன்னோடு விளையாட உள்ள வீரர்களுடன் தன்னை அறிமுகம் செய்து கொண்டார் தினேஷ் கார்த்திக். “நான் தினேஷ் கார்த்திக். நான் இப்போது பகுதி நேர கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் போட்டிகளை அதிகளவில் வர்ணனை செய்து வருகிறேன். கிரிக்கெட் பயிற்சி சார்ந்து இயங்கி வருகிறேன். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த லீக் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன். நான் இரு குழந்தைகளின் அப்பா” என அப்போது அவர் தெரிவித்தார். பயிற்சி சார்ந்த வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்து வருகிறது. இந்த அணியை டேவிட் மில்லர் கேப்டனாக வழிநடத்துகிறார்.