‘விராட் கோலி தன் பேட்டிங்கைச் சரி செய்துகொள்ள களத்தில் நடத்தையில் கொஞ்சம் ஓவராகப் போகாமல் மனநிலையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் ஃபார்முக்கு மீண்டும் வர முடியும்’ என்று தன் நண்பருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
பெர்த்தில் 2-வது இன்னிங்சில் எடுத்த 100 ரன்களுக்குப் பிறகு படுமட்டமான தொடராக அவருக்கு பார்டர் – கவாஸ்கர் டிராபி அமைந்தது. அதுவும் ஒவ்வொரு அவுட்டும் அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பின் ரீப்ளே அவுட்களே. இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் நல்ல நண்பராக விராட் கோலிக்கு கொடுத்த அட்வைஸ் இது…
“ஒவ்வொரு முறையும் விராட் கோலி தன் மனத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலி ஒரு போராட்டக்காரர். சண்டை குணம் உண்டு. ஆனால் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாதபோது சண்டை மனோபாவத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். களத்தில் கோபாவேசத் தருணங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
ஒரு பேட்டராக அவர் ஒவ்வொரு பந்துக்கும் தன் மனநிலையை சரியாக சீரமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு என்பதாகக் கொள்ள வேண்டும். பவுலர் யார் என்பதை மறந்து விட வேண்டும். சில வேளைகளில் கோலி இந்த அடிப்படைகளை மறந்து விடுவார் போலிருக்கிறது.
அவரது போராட்ட குணமும், ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை முன்னிறுத்தி வெளிப்படுத்திக் கொண்டு இந்திய ரசிகர்களுக்கு ‘நான் இருக்கிறேன் பார், உங்களுக்காகப் போராட’ என்று தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார்.
கோலியின் திறமை, அனுபவம், மகத்துவம் பற்றி எந்த வித பிரச்சினையும் இல்லை. ஒவ்வொரு பந்திற்கும் தன்னை மறு கவனப்படுத்திக் கொள்வதற்கான விஷயமாகும் இது.
ஆனால் அவர் கள நிகழ்வுகளில் மேலதிக ஈடுபாடு கொள்கிறார். களத்தில் நடக்கும் நிகழ்வுகளில் கோலி பங்கேற்பதன் மூலம் தன் இருப்பை கவனப்படுத்த விரும்புகிறார். இது போராட்ட குணம் உள்ள வீரர்களின் வழக்கம்தான். ஆனால் கோலி சில வேளைகளில் ஓவராகப் போய் விடுகிறார். எது அவரது பலமோ அதுவே அவரது பலவீனமாகவும் இருக்கிறது.
பார்டர் – கவாஸ்கர் டிராபியில் அவர் சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டதைப் பார்த்தோம். இதனால் பேட்டிங்கில் அவர் சொதப்பும் போதெல்லாம் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகினார்.
உலகில் எந்த பேட்டரும் ஒரே விதத்தில் அவுட் ஆவது நடக்கக் கூடியதுதான். விராட் அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு வர முடியும். ஆனால், அதற்கு வலுவான குணாம்சம் வேண்டும். நிறைய தாகம் வேண்டும். வலைப்பயிற்சியில் நீண்ட காலம் செலவிட வேண்டும்.
அதாவது மன நிலையை ரீ-செட் செய்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு முறையும் ரீ-செட் செய்ய வேண்டும்” என்று தன் நண்பருக்கு அட்வைஸ் செய்துள்ளார் ஏ.பி.டிவில்லியர்ஸ். நண்பரின் அறிவுரைக்குச் செவிமடுப்பாரா விராட் கோலி?