இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி! | sri lanka won third t20i versus new zealand

Share

நெல்சன்: இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் நெல்சன் நகரிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா அபாரமாக விளையாடி 46 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். அதற்கு அடுத்தபடியாக கேப்டன் அசலங்க 24 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜகாரி பவுல்க்ஸ், மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடத் தொடங்கியது.

நியூஸிலாந்து அணிக்கு டிம் ராபின்சனும், ரச்சின் ரவீந்திராவும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். டிம் ராபின்சன் 37 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 69 ரன்களும் (39 பந்துகள், 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்தனர். இறுதியில் மிட்செல் சாண்ட்னர் 14, ஜகாரி பவுல்க்ஸ் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவுல்க்ஸும், சாண்ட்ரும் இணைந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் 3-வது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலைத் தேடிக் கொண்டது. இதையடுத்து தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக குசல் பெரேராவும், தொடர் நாயகனாக ஜேக்கப் டஃபியும் தேர்வு செய்யப்பட்டனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com