இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 3வது போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் ஆட்டம் நடக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது.
ஒருவேளை மழையால் காபா டெஸ்ட் போட்டி நடக்காமல் ரத்து செய்யப்பட்டால், இந்திய அணி 3வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா அல்லது இந்த டெஸ்டில் வென்றால் பைனலுக்கு முன்னேற முடியுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்த் டெஸ்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணியினர், அடிலெய்ட் டெஸ்டில் இந்திய பேட்டர்களின் சொதப்பலான ஆட்டத்தால் தோல்வியடைந்தனர்.
அடிலெய்ட் டெஸ்டில் நிதிஷ் குமார் ரெட்டியை தவிர எந்த பேட்டரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. நிதிஷ் சேர்த்த 42 ரன்கள்தான் 2 இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இதனால் பிரிஸ்பேன் காபா டெஸ்டில் இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மான் கில் போன்ற பேட்டர்களும் பொறுப்புடன் ஆடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளதால், காபா டெஸ்டில் யார் வென்று வெற்றிக் கணக்கில் முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு லண்டனில் நடக்கவிருக்கும் நிலையில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பெரிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விளையாடிய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.
இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறதா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 3வது முறையாகத் தகுதி பெறுவதில் வாய்ப்புக் கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை. புள்ளிப் பட்டியலில் இந்திய அணி, தற்போது 16 போட்டிகளில் 9 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிரா என 110 புள்ளிகளுடன் 57.29 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணி, 76 புள்ளிகளுடன், 63.33 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 102 புள்ளிகளுடன், 60.71 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்திலும் இருக்கிறது.
இந்திய அணிக்கு இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் இருப்பதால், அடுத்து வரக்கூடிய அனைத்து ஆட்டங்களிலும் வென்றால், 64.04 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடிக்கலாம். அதேநேரம், ஆஸ்திரேலிய அணி அடுத்து வரும் 3 போட்டிகளிலும் தோற்று, இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட்களிலும் வென்றாலும், 64 வெற்றி சதவீதத்தை எட்ட முடியாது என்பதால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு 3வது முறையாகத் தகுதி பெறலாம்.
ஒருவேளை இந்திய அணி அடுத்து வரும் 3 டெஸ்ட்களில் 2 வெற்றி, ஒரு டிரா என முடித்து டெஸ்ட் தொடரை 3-0 என முடித்தாலும் இந்திய அணி தகுதி பெறும். ஆனால், ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியிடம் ஒரு டெஸ்டில் தோற்க வேண்டும்.
இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இழக்கும்பட்சத்தில் வெற்றி சதவீதத்தில் ஆஸ்திரேலிய அணியைவிட பின்தங்கிவிடும். இருப்பினும் ஆஸ்திரேலிய அணியை இலங்கை அணி 2-0 என்று வென்றால் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம்.
ஒருவேளை காபா டெஸ்டில் மழை குறுக்கிட்டால்?
ஒருவேளை காபா டெஸ்டில் மழை குறுக்கிட்டால் டெஸ்ட் போட்டி நடக்காமல் ரத்தாகும் சூழல் ஏற்படலாம். அப்படி நடந்தால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இயலும்.
ஒருவேளை இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-2 எனக் கைப்பற்றினால் 134 புள்ளிகளுடன், 58.77 வெற்றி சதவீதத்துடன் இருக்கும். ஆஸ்திரேலிய அணி தனக்கிருக்கும் இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளை வென்றாலும் 126 புள்ளிகளுடன் 55.26 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணியைவிட பின்தங்கித்தான் இருக்க முடியும்.
அதேநேரம் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வென்றால் 69.44 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடிக்கும்.
இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினால் 138 புள்ளிகளுடன் 60.52 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்திற்கு முன்னேறும். ஆஸ்திரேலிய அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றாலும் 57 சதவீதம் மட்டுமே பெற இயலும், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாது.
ஒருவேளை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்று தொடரை சமனில் முடித்தால் இந்திய அணி வெற்றி சதவீதம் 57.01 என முடிக்கும். அப்போது ஆஸ்திரேலிய அணி 130 புள்ளிகளுடன், இந்திய அணியை வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஆதலால் இந்திய அணிக்கு அடுத்து வரக்கூடிய 3 ஆட்டங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இருக்கப் போகிறது. இதில் இந்திய பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி ஆட வேண்டிய நிலையில் உள்ளனர்.
மழையால் ஆட்டம் பாதிக்கப்படுமா?
பிரிஸ்பேனில் வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை பலத்த மழைக்கு 88% வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையமான அக்குவெதர் தெரிவித்துள்ளது. இதில் முதல்நாள் ஆட்டம்(நாளை) முதலே மழையின் குறுக்கீடுகள் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது நாள் காலையில் மழை இருக்கும் என்றும், 3வது மற்றும் 5வது நாளின்போது மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆனால், 4வது நாளின்போது பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அக்குவெதர் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் காபா டெஸ்டில் மழையின் குறுக்கீடு இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஆட்டம் ரத்தாகும் அளவுக்கு இருக்குமா அல்லது ஏதாவது நாட்கள் மட்டும் ஒத்தி வைக்கப்படுமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மறக்க முடியாத காபா மைதானம்
சுமார் 33 ஆண்டுகளாக காபா மைதானத்தில் வெளிநாட்டு அணிகள் வென்றதில்லை என்ற வரலாற்றை 2021ஆம் ஆண்டு இந்திய அணி மாற்றி அமைத்து வெற்றி பெற்றது. அப்போது இந்திய அணியில் ஷமி, பும்ரா, கோலி, அஸ்வின் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் ரஹானே கேப்டன்சியில் ரிஷப் பந்தின் அருமையான ஆட்டத்தால் இந்திய அணி வென்று இனிய நினைவுகளை அளித்துள்ளது.
அதேபோல முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி 2003ஆம் ஆண்டு இந்த மைதானத்தில்தான் 144 ரன்கள் சேர்த்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்டை டிரா செய்ய உதவினார். அந்த வகையில் காபா மைதானம் இந்திய அணிக்கு ஏற்றதாக கடந்த சீசன்களில் இருந்துள்ளது.
கடந்த 1947ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணி காபா மைதானத்தில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா மற்றும் 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
அதேநேரம் காபா மைதானம் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகரமானதாக கடந்த காலங்களில் இருந்துள்ளது. 1988 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட தோற்காமல் இருந்து சாதனை படைத்துள்ளது.
ஆனால், 2021ஆம் ஆண்டிலிருந்து இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 2 ஆட்டங்களில் வென்றுள்ளது, மற்ற இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. அதாவது இந்திய அணியிடம் 2021ஆம் ஆண்டிலும், 2024இல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடமும் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.
மீண்டும் ரோஹித் தொடக்கமா?
இந்திய அணியில் இப்போது தலையாய பிரச்னையாக இருப்பது பேட்டர்களின் மோசமான ஃபார்ம். அடிலெய்ட் டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருண்டது.
ரோஹித் சர்மா, கோலி, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மான் கில் ஆகியோர் அடிலெய்ட் டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.
இதனால், இந்திய பேட்டர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவாரா அல்லது 6வது வரிசையில் களமிறங்குவாரா என்பது நாளைதான் தெரியும். ஆனால், ரோஹித் சர்மா தொடக்க வீரராக வர வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி இருவரும் வலியுறுத்தியுள்ளதால், என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ரோஹித் சர்மாவின் தீவிரமான பேட்டிங் பயிற்சியைப் பார்க்கும்போதும், காபா ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் ரோஹித் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 8 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 20 ரன்களை கூடக் கடக்கவில்லை, 12 இன்னிங்ஸ்களாக ஒரு சதம்கூட அடிக்கவில்லை என்பது அவரின் மோசமான ஃபார்மை வெளிப்படுத்துகிறது. ஆதலால் ரோஹித் சர்மா எந்த நிலையில் களமிறங்கினாலும் நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல விராட் கோலி பெர்த் டெஸ்டில் சதம் அடித்தாலும், அடிலெய்ட் டெஸ்டில் மோசமாக ஆடினார். கோலி, ரோஹித் இருவரும் 30 வயதைக் கடந்துவிட்டதால் இந்த டெஸ்ட் தொடர்தான் இருவருக்கும் கடைசி தொடராக இருக்கும் எனத் தெரிகிறது. இதில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இனிமையான நினைவுகளைச் சுமந்து கோலி, ரோஹித் இருவரும் தாயகம் திரும்பலாம். இல்லாவிட்டால், கோலி, ரோஹித் இருவருக்கும் மோசமான நினைவுகளே மனதில் இருக்கும்.
பெர்த் டெஸ்ட் தவிர அடிலெய்ட் டெஸ்டில் ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மான் கில் ஆகியோர் சிறப்பாக ஆடவில்லை. இந்த டெஸ்டில் ஒருவேளை ராகுல் 6வது இடத்தில் களமிறக்கப்பட்டால், அவர் நிதானமாக பேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியை இதே காபா மைதானத்தில் வென்றதற்கு சுப்மான் கில், ரிஷப் பந்த் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆதலால் இருவரும் அதேபோன்ற பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சில் நிதிஷ் ராணாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் களமிறக்கப்படலாம், அதேபோல அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ராணாவைவிட ஆகாஷ் தீப் சிங் ஓரளவு பேட்டிங் செய்யக் கூடியவர், பந்தை நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
காபா ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி ஆகியோர் உச்சபட்ச உழைப்பை வழங்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால், பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், சுமையை ஏற்றாமல் எளிதாக ஆட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டிய முக்கியக் கடமை இந்திய பேட்டர்களுக்கு இருக்கிறது.
ஹேசல்வுட் வருகை
அடிலெய்ட் டெஸ்டில் காயம் காரணமாக அணியில் இடம் பெறாத வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவது அந்த அணிக்கு கூடுதல் வலிமையை அளிக்கும்.
ஆஸ்திரேலிய அணியில் மெக்ஸ்வீனி, லாபுஷேன் இருவரும் கடந்த டெஸ்டில் தங்கள் அணி வெல்ல முக்கிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இருவரும் நிலைத்து பேட் செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பியிருக்கும்.
டிராவிஸ் ஹெட் சதமடித்து கடந்த டெஸ்டை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். இவரின் பேட்டிங் இந்திய பந்துவீச்சாளர்களுக்குப் பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
லாபுஷேன் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. உஸ்மான் கவஜா, ஸ்மித் இருவரும் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் ஸ்மித் கடந்த 2 டெஸ்ட்களிலும் 19 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கடைசியாக 24 இன்னிங்ஸ்களுக்கு முன் ஸ்மித் சதம் அடித்துள்ளார். அதன்பின் இன்னும் பெரிய இன்னிங்ஸை அவர் வழங்கவில்லை ஃபார்மின்றி தவித்து வருகிறார். இது அந்த அணிக்கு நடுவரிசையில் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.
பந்துவீச்சில் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், மார்ஷ் ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசுகிறார்கள். கடந்த டெஸ்டில் ஹேசல்வுட் இல்லாமல் ஸ்டார்க், கம்மின்ஸ் இருவரும் சேர்ந்து இந்திய பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக அமைந்தனர், போலந்தை பக்கபலமாக வைத்து ஆட்டத்தை வென்றனர்.
ஆதலால், பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி, கடந்த டெஸ்டில் கடுமையான ஹோம் ஓர்க் செய்துள்ளது தெரிந்தது. இந்த மைதானத்தில் மட்டும் கம்மின்ஸ் 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தி வலிமையான ரெக்கார்ட் வைத்துள்ளார்.
காபா ஆடுகளம் எப்படி?
காபா ஆடுகளம் அடிலெய்ட் ஆடுகளத்தைப் போல் அதிகமான பவுஸ் இருக்காது. ஆனால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், சீமிங்கிற்கு சாதகமாக இருக்கும். பிரிஸ்பேனில் காலநிலை குளிர்ச்சியாகவும், காற்று சற்று இருக்கும் என்பதால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக ஆடுகளம் ஒத்துழைக்கும்.
அதேநேரம், 2வது மற்றும் 3நாட்களில் சற்று வெயில் அடித்து ஆடுகளம் காய்ந்தால் பேட்டர்களுக்கும் நன்கு ஆடுகளம் ஒத்துழைக்கும். இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களும் சரியான லைன் அன்ட் லென்த்தை கண்டறிந்து பந்துவீசினால், ஆட்டம் சுவாஸ்ரஸ்யமாக செல்லும்.
ஆதலால், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தால், விக்கெட்டுகளை இழக்காமல் வேகப்பந்துவீச்சை கவனமாகக் கையாண்டு செட்டில் ஆகிவிட்டால், முதல் இன்னிங்ஸில் பொறுமையாக பேட் செய்தால், பெரிய ஸ்கோரை எடுக்க வாய்ப்புண்டு. சுழற்பந்துவீச்சுக்குப் பெரிதாக ஒத்துழைக்காது.
இதுவரை காபா மைதானத்தில் 68 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 26 முறையும், முதலில் பந்துவீசிய அணி 27 முறையும் வென்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரியாக 327 ரன்களும், 2வது இன்னிங்ஸில் சராசரியாக 312 ரன்களும் சேர்க்கலாம். ஆனால் 3வது 4வது இன்னிங்ஸ்களில் படிப்படியாக ரன் சேர்ப்பு அளவு குறையும்.
இந்திய ப்ளேயிங் லெவன்(உத்தேசம்)
- ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா(கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ்.
ஆஸ்திரேலிய ப்ளேயிங் லெவன்(உத்தேசம்)
- நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரெ, மிட்ஷெல் மார்ஷ், பேட் கம்மின்ஸ்(கேப்டன்), ஜோஸ் ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க். நேதன் லேயான்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு