பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டியில் சிராஜூக்கும் ஹெட்டுக்கும் இடையேயான வாக்குவாதம் சர்ச்சையானது. விதிமுறைகளை மீறியதால் அவர்கள் இருவருக்குமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சிராஜின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, ‘லபுஷேன் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது சைட் ஸ்க்ரீன் பக்கம் யாரோ நடந்து செல்வதை பார்க்கிறார். உடனே பேட்டிங் ஸ்டாண்டிஸிலிருந்து பின் வாங்கி நகர்ந்து விடுகிறார். ஆனால், சிராஜ் வந்த வேகத்தில் ஸ்டம்பை நோக்கி பந்தை வேகமாக வீசுகிறார். இது ஒரு தரக்குறைவான செயல். சின்னச்சின்ன குழந்தைகளெல்லாம் உங்களை ரோல் மாடலாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு சரியான விஷயத்தை புகட்டுங்கள். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் ஆட்டம் என்கிற இமேஜை கெடுத்துவிடாதீர்கள். அதேமாதிரி, ஹெட் ஒரு கேட்ச்சை கொடுத்தார். அது கடினமான கேட்ச்தான். அதை பிடிக்க சிராஜ் கடுமையாக முயன்றார். அவரால் முடியவில்லை. அவரின் முயற்சியை பாராட்டி அஷ்வினெல்லாம் கைத்தட்டினார்.
அந்த கேட்ச்சை அப்போதே பிடித்திருந்தால் அது பெரிய திருப்புமுனையாக இருந்திருக்கும். அதைவிட்டு விட்டு அவர் 140 ரன்களை அடித்த பிறகு, உங்களின் பந்துகளை நாலாபுறமும் விளாசிய பிறகு அவரை அவுட் ஆக்கிவிட்டு அப்படி ஆக்ரோஷமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நன்றாக இல்லை. கொண்டாட்டங்களை குறை சொல்லவில்லை. அவ்வளவு ஆக்ரோஷமாக ஹெட்டை பெவிலியனுக்கு வழியனுப்பி வைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அப்படி அவரை அவுட் ஆக்கும் வித்தை உங்களுக்கு முன்பே தெரியுமென்றால் எதற்கு 140 ரன்கள் வரை அடிக்கவிட்டீர்கள். முன்பே அவுட் ஆக்கியிருக்கலாமே?’ என விமர்சித்திருக்கிறார்.
சிராஜ் மீதான கைப்பின் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
