புதுச்சுவை புத்தாண்டு: வஞ்சிர மீன் குழம்பு | Waffle fish broth

Share

செய்திப்பிரிவு

Last Updated : 29 Dec, 2019 10:16 AM

Published : 29 Dec 2019 10:16 AM
Last Updated : 29 Dec 2019 10:16 AM

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

வஞ்சிர மீன் குழம்பு

என்னென்ன தேவை?

வஞ்சிரம் மீன் – 8 துண்டுகள்

புளி – ஒரு எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

வதக்கி அரைக்க

சின்ன வெங்காயம் – 20

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

தேங்காய் – அரை மூடி

தக்காளி – 3

மஞ்சள் தூள் – சிறிதளவு

தாளிக்க

நல்லெண்ணெய் – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 3

பூண்டு – 5 பல்

சின்ன வெங்காயம் – 15

வெந்தயம் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை எண்ணெய்யில் வதக்கி, ஆறியதும் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயம், நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள்.

அரைத்த கலவையைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை குறைந்த தீயில் வதக்குங்கள். புளிக்கரைசலைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்துக் குழம்பைக் கொதிக்கவிடுங்கள். குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகளைச் சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு மல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com