Doctor Vikatan: என் வயது 56. கடந்த சில வருடங்களாக மலம் கழிப்பது சிரமமாக உள்ளது. வெஸ்டர்ன் டாய்லெட்தான் உபயோகிக்கிறேன். மலம் திடமாகி, வெளியேற சிரமமாக உள்ளது.. மலத்தை இலகுவாக மாற்றி வெளியேற்ற ஏதும் தீர்வுகள் உள்ளனவா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
உங்களுடைய வயது 56 என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் இந்திய கழிப்பறையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதா என்று பாருங்கள். அது மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து ஓரளவு நிவாரணம் தரும்.
அதற்கு வாய்ப்பில்லை, மூட்டுவலி இருக்கிறது, வயதாகிவிட்டது என நினைத்தால் வெஸ்டர்ன் கழிவறையையே பயன்படுத்துங்கள். இந்த வயதில் வரும் மலக்கட்டுக்கு குடல் இயக்கம் குறைவதுதான் பிரதான காரணமாக இருக்கும். அதைச் சரிசெய்ய அடிக்கடி வெதுவெதுப்பான நீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

பத்து நாள்களுக்கொரு முறை ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். உலர் திராட்சையை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடித்துவந்தாலும் நிவாரணம் தெரியும்.
உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருக்கிறதா என டெஸ்ட் செய்யுங்கள். நீரிழிவு இல்லை என்ற பட்சத்தில் கருணை லேகியம் அல்லது தேற்றான் லேகியம் இரண்டில் ஒன்றை தினமும் இரவில் அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். நீரிழிவு இல்லாதவர்கள், மலச்சிக்கலில் இருந்து விடுபட, நார்ச்சத்துள்ள பழங்கள் நிறைய சேர்த்துக்கொள்ளலாம்.

சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்துச் சாப்பிடுவதும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இவையெல்லாம் மலச்சிக்கல் பிரச்னைக்கான அடிப்படை தீர்வுகள். இவற்றைப் பின்பற்றிப் பார்த்துவிட்டு, நிவாரணம் தெரியவில்லை என்கிற பட்சத்தில் மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.