ஒரு மாரடைப்புக்கே செத்துப் பிழைத்து மீண்டு வரும்நிலையில் மும்பையைச் சேர்ந்த 51 வயதான பெயர் குறிப்பிடாத பெண் ஒருவருக்கு கடந்த 16 மாதங்களில் ஐந்து முறை மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஐந்து ஆஞ்சியோபிளாஸ்டி, ஒரு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளன. ஐந்து ஸ்டென்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் அந்தப் பெண் குழம்பி இருக்கிறார்.

இப்பெண் நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். செப்டம்பர் 2022-ல் 107 கிலோ எடையோடு இருந்தவர், இதுவரையில் 30 கிலோ எடையைக் குறைத்து இருக்கிறார். இவருக்கு கொலஸ்ட்ராலை குறைக்கும் `பிசிஎஸ்கே9 இன்ஹிபிட்டர்’ ஊசி போடப்பட்டுள்ளது.
இவரது நீரிழிவு பிரச்னை கட்டுப்பாட்டில் உள்ளபோதும், மாரடைப்பு ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது.
பிப்ரவரி, மே, ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் இவருக்கு தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் `எனக்கு என்னதான் பிரச்னைன்னே தெரியலையே’ என்று மிகவும் வருந்துகிறார்.
`இப்பெண்ணின் இதய பிரச்னைகளுக்கான காரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கையில், இது `vasculitis’ நோயின் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

இந்த பாதிப்பில் ரத்த நாளங்கள் வீக்கமடையும் மற்றும் குறுகிப்போகும். ஆனால், சோதனை முடிவுகள் இதுவரை தெளிவான எந்த நோயறிதலையும் காட்டவில்லை.
மாரடைப்புக்கான அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இவருக்குத் தோன்றுகின்றன. இவருக்கு வெவ்வேறு இடங்களில் புதிய அடைப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. முதல் மாரடைப்பில் இடது தமனியில் 90% அடைப்பு ஏற்பட்டது. அடுத்த முறை வலது கரோனரி தமனியில் 99% அடைப்பு ஏற்பட்டது’ என இப்பெண்னின் இதய மருத்துவர் ஹஸ்முக் ராவத் கூறியுள்ளார்.