மாஞ்சோலை: `3 இட்லிகளுக்காக நடந்த போராட்டம்!'; அறிந்திடாத கதைகள்|1349/2 எனும் நான்|பகுதி-15

Share

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பருகும் பானம் தேநீர். ஆனால் செடியிலிருந்து பறித்த தேயிலையை அப்படியே வெந்நீரில் போட்டு காய்ச்சி அருந்தினால் அதன் சுவையை முழுமையாக உணரமுடியாது. பதப்படுத்துதல் உள்ளிட்ட பல கட்டங்களைத் தாண்டிய பின்னர்தான் அவை தேயிலைத்தூளாக மாறும்.

தேயிலை கொழுந்து

தரமான தூள் கிடைக்க தேயிலை பறிக்கும் இடத்திலேயே தொழிற்சாலை இருப்பது அவசியம். அதனால் 1936ல் மாஞ்சோலையிலும், 1952ல் நாலுமுக்கிலும் தேயிலைத் தொழிற்சாலைகளை கம்பெனி உருவாக்கியது. முழுக்க ஆர்கானிக் முறையில் தேயிலை உற்பத்திசெய்ய வேண்டி ஊத்து எஸ்டேட்டில் 1988ஆம் ஆண்டு தொழிற்சாலை கட்டப்பட்டது.

தேயிலைக்காட்டில் பறிக்கப்படும் கொழுந்தை நாளொன்றுக்கு மூன்று வேளை எடைபோட்டு, அவை வெம்பிப்போகும் முன்னர் கொழுந்து வண்டிகள் மூலம் விரைவாக தேயிலைத் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்படும். அங்கு காற்றோட்டமான அளவுக்குக் கம்பிவைத்துக் கட்டப்பட்டிருக்கும் பகுதியில் கொட்டி பரப்பிப்போடுவார்கள். போதிய அளவுக்கு காற்று வாங்கியதும் அதனை அரைப்பதற்கான இயந்திரத்தில் போடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குப்பிறகு அதன் வெப்பத்தை கணக்கில்கொண்டு, ரோதையில் கொடுத்துத் தேய்த்து உடைப்பார்கள். சுமார் 50 நிமிடங்கள் கழித்து சல்லடையில் சலித்து, சிறிய தூள், பெரிய தூள் எனத் தரம் பிரித்து அலுமினியத் தட்டில் காயவைப்பார்கள். பின்னர் விறகு அடுப்பிலிருந்து வரும் வெப்பத்தில் வறுப்பார்கள். மீண்டும் சல்லடையில் கொடுத்து தரம்பிரித்து எடுப்பார்கள். தொழிற்சாலையின் உள்ளேயே விற்பனைக்கான அட்டைப்பெட்டிகளில் அடைத்து லாரிகளில் ஏற்றி வெளிநாடுகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லும் கம்பெனி.

அதிகாலை 4 மணி, காலை 7 மணி, மாலை 4 மணி, நள்ளிரவு 12 மணி என 2010க்கு முன்பு வரையிலும் எஸ்டேட் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு நான்கு வேலைநேரம் (Shift) இருக்கும். தொடர்ந்து இயங்கும் அளவுக்கு அப்போது உற்பத்தி இருந்தது. தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக்குறைந்து தற்போது நாலுமுக்கில் மட்டுமே தொழிற்சாலை இயங்கிவருகிறது.

தொழிற்சாலையில் உணவு இடைவேளை நீங்கலாக எட்டு மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். அங்குள்ள தொழிலாளர்களின் வேலைநேரம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இதனால் அனைத்துத் தொழிலாளர்களும் சுழற்சிமுறையில் எல்லா வேலைநேரத்திலும் வேலைசெய்யும் நிலை இருந்தது.

இரவு 12 மணிக்கு வேலைக்குச்செல்லும் தொழிலாளர்களுக்குக் காலை 5 மணிக்கு கம்பெனி சார்பில் 3 இட்லிகள் வழங்கப்படும். அதற்குக் கூடுதலாக வாங்கும் இட்லிக்கு தொழிலாளர்கள் காசு கொடுக்கவேண்டும். மற்ற வேலைநேரங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு இட்லி வழங்கப்படாது.

தேயிலைத் தொழிற்சாலை

1971ல் நாலுமுக்கில் தேயிலைத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தார்கள். உணவுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அது. இரவு 12 மணிக்கு வேலைக்கு வருபவர்களுக்கு வழங்கப்படுவது போலவே, அதிகாலை 4 மணிக்கு வரும் தொழிலாளர்களுக்கும் 3 இட்லிகள் வழங்கிட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

கோரிக்கையை நிராகரித்தது கம்பெனி. அதனால் நாலுமுக்கு ஃபேக்டரியில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் எல்லோரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவுசெய்தார்கள். கம்பெனி செவி சாய்க்கவில்லை. டீ ஃபேக்டரியில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள், கடும்பனியை பொருட்படுத்தாமல் சுழற்சி முறையில் விடியவிடிய ஃபேக்டரி வாசலில் உட்கார்ந்து போராட ஆரம்பித்தார்கள். அதன் காரணமாக கம்பெனி அதிகாரிகள் தவிர்த்து தொழிற்சாலைக்குள் வேறுயாராலும் செல்ல முடியவில்லை.

தரமான தூள் கிடைக்க, பறித்த தேயிலைக்கொழுந்தை காயவிடாமல், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அரைத்துத் தூளாக்க வேண்டும். வேலைநிறுத்தம் காரணமாக தொழிற்சாலை இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது. அதேவேளையில் தேயிலைக்காட்டில் வேலைபார்த்த தொழிலாளர்கள் வழக்கத்துக்கும் அதிகமாக தேயிலையைப் பறித்தார்கள். அவ்வாறு பறிக்கப்பட்ட தேயிலைகளை உரிய நேரத்துக்குள் பதப்படுத்திட வேண்டி, மாஞ்சோலையில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டுசென்றது கம்பெனி.

போராட்ட சமயத்தில் தொழிற்சாலைக்கு யாரும் வேலைக்குவராத காரணத்தால், போராட்டத்தைத் தோற்கடிக்கும் விதமாக அப்போதைய குரூப் மேனேஜர் முத்தண்ணாவின் ஆலோசனையில் தொழிற்சாலையில் தானே இறங்கி வேலைசெய்தார் அப்போதைய எஸ்டேட் மேலாளர் அவ்ரில். ஆனால் அவருக்குத் துணையாக தொழிலாளர்கள் எவரும் செல்லாததால் அவரால் தனி ஆளாக ஒன்றும்செய்ய இயலாமல் போனது.

அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே நுழையமுடியுமென்பதால், எஸ்டேட்டுக்குள் வாழ்ந்தாலும் டீ ஃபேக்டரி பார்க்காத தொழிலாளர் பலருண்டு. அதனால் ஃபேக்டரி வேலையின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. தற்போது வரையிலும் அது நீடித்தே வருகிறது. இருப்பினும் தொழிற்சாலையில் தேயிலைத்தூளை சுவாசித்துக்கொண்டே இருப்பதால் நுரையீரல் பிரச்சனை ஏற்படுவதையும், அங்கு எரிந்துகொண்டே இருக்கும் விறகடுப்பின் அதீத வெப்பத்தால் மார்புப்பகுதி பாதிப்புக்கு உள்ளாவதையும் கவனத்தில்கொள்ளும் அளவுக்கு தொழிலாளிகள் யாரும் விழிப்புணர்வு பெறவில்லை.

தேயிலைத் தொழிற்சாலை

தேயிலைக்காட்டில் கடும் மழையிலும், கொடும்பனியிலும், மிகுந்த அட்டை கடியையும் அனுபவிக்க வேண்டும். தேயிலைக்குச்சிகள் குத்தி அவ்வப்போது காயங்கள் ஏற்படும். வீட்டிலிருந்து தேயிலைக்காட்டிற்கு அதிக தூரம் நடந்து செல்லவேண்டும். அதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வேலைக்குக் கிளம்பவேண்டும். பறிக்கும் கொழுந்தை உயரமான / பள்ளமான இடங்களிலிருந்து சுமந்தபடி தொலைவில் இருக்கும் நிறுவைக்களத்திற்கு கொண்டுவரவேண்டும். இதுபோன்ற பிரச்னைகள் எதுவும் ஃபேக்டரியில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்காது. தேயிலைக்காட்டில் வேலைபார்ப்பவர்களைக் காட்டிலும், ஃபேக்டரி தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் சம்பளம் உண்டு. இதுபோன்ற காரணங்களால், தொழிலாளர்கள் பலர் தேயிலை தொழிற்சாலையில் வேலைபார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டுமே வேலைசெய்ய இயலும் தொழிற்சாலையில் வேலைபார்க்க பலரும் தங்களது பெயரை கம்பெனியில் பதிவுசெய்து நீண்டகாலம் காத்திருந்த காலமும் உண்டு.

அப்படிப்பட்ட தொழிலாளர்களில் சிலரை அடையாளம் கண்டு, ஆசைவார்த்தைகளைக் கூறி அவர்களை இரவு வேளையில் பின்பகுதியில் உள்ள காட்டுப்பாதை வழியாக தொழிற்சாலைக்குள் அழைத்துவரத் திட்டமிட்டது கம்பெனி. தொழிலாளர்கள் சிலர் அந்த வலையில் வீழ்ந்தார்கள். அதனை மிகுந்த இரகசியமாய் வைத்துக்கொண்டது கம்பெனி. இப்படிப்பட்ட மறைமுக வழியைக் கையாண்டு போராட்டத்தினை உடைக்கும் செயலில் கம்பெனி இறங்கும் என்று போராட்டக்காரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் போராட்டத்தினை துவங்கும் முன்னரே ஃபேக்டரியின் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு வந்திருந்தனர். அதனால் பின்புறம் வழியாக கம்பெனியால் கொண்டுவரப்பட்ட தேயிலைத்தோட்டத்தில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்களால், தொழிற்சாலை வளாகத்துக்குள் நுழைய முடியவில்லை. இரகசியம் என்பதே இல்லாத எஸ்டேட் பகுதியில் எவ்வளவு நேரத்துக்குத்தான் கம்பெனியால் இரகசியத்தை காக்கமுடியும்.

தேயிலைத் தொழிற்சாலை

தொழிற்சாலைக்குள் சிலர் நுழைய முயற்சிப்பதை அறிந்த போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர், தொழிற்சாலைக்கு பின்புறம் சென்று, காட்டுக்குள் ஆட்கள் நடந்துவரும் சத்தம் கேட்கும் போதெல்லாம், அந்தத் திசையை நோக்கி கல்லெறியத் துவங்கினார்கள். இதனால் பயந்துபோன தொழிலாளர்கள், தொழிற்சாலைக்குள் நுழைய முயற்சிக்காமல் பின்வாங்கினார்கள். அத்தொழிலாளர்களின் வீடுகளுக்கு மறுநாள் சென்று தங்கள் கோரிக்கையின் நியாயத்தை எடுத்துச்சொன்னார்கள். அதனை உணர்ந்துகொண்டு போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்தார்கள் அவர்கள்.

இரவு 12 மணிக்கு வேலைக்கு வருபவர்கள், தாங்கள் வேலைக்கு கிளம்பும் அந்த நள்ளிரவில் சாப்பிட்டுவிட்டு வரமாட்டார்கள், இரவு உணவை, அவர்கள் 8 மணிக்குள் சாப்பிட்டிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு அதிகாலையில் ஐந்து மணிக்கு 3 இட்லிகள் வழங்கப்படுகிறது என்று கம்பெனி சொல்கிறது. அதுபோலவே அதிகாலை நான்கு மணிக்கு வரும் தொழிலாளர்களும் அதிகாலை மூன்று மணிக்கு சமைத்து சாப்பிட்டுவிட்டு வர வாய்ப்பில்லை. அந்த தொழிலாளர்களும் முந்தைய இரவில் 8 மணிக்கு முன்பாகவே சாப்பிட்டிருப்பார்கள். ஆகவே 12 மணிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களையும் அதிகாலை 4 மணிக்கு வேலைக்கு வருபவர்களையும் ஒரேபோல பாவிக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் வாதம்.

ஒருபுறம் நாலுமுக்கு தொழிற்சாலையில் முழுமையாக வேலை நடக்கவில்லை. பறித்த தேயிலைகளை மாஞ்சோலை தொழிற்சாலையில் கூடுதலாக அரைத்துத் தீர்க்க முடியவில்லை. காட்டில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை ஆசைவார்த்தை காட்டி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தவும் முடியவில்லை. போராட்டக்காரர்கள் அமைதியான வழியில் முழுநாளும் போராடி வருகிறார்கள். அவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான அறிகுறியும் தென்படவில்லை. தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் அந்தப் போராட்டத்திற்கு எல்லா தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குகிறது என்பது போன்ற பல்வேறு காரணங்களால், நிலைமை மேலும் நீடித்தால் தமக்கு இழப்பு பெரிதாக இருக்கும் என்பதை உணர்ந்த கம்பெனி, இறங்கி வந்தது. அப்போது திமுக தொழிற்சங்க தலைவராக இருந்த, பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்த இரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்டோரின் தலையீட்டில் ஒரே வாரத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதிகாலை 4 மணிக்கு வேலைக்குவரும் தொழிலாளர்களுக்கும் கம்பெனி கணக்கில் 3 இட்லிகள் வழங்கிட ஒத்துக்கொண்டது.

டீத்தூள்

தேயிலையை அரைப்பது, தரம் பிரிப்பது என சில வேலைகளுக்கு மட்டுமே இயந்திரங்கள். இதர எல்லா வேலைகளிலும் தொழிலாளர்களே ஈடுபடுவார்கள். இதனால் தேயிலையின் சுவை அதிகரிக்கும். பல நாடுகளில் ஒவ்வொன்றிலும் 1500க்கும் அதிகமான வகைகளில் தயாரிக்கப்படும் பிளாக் டீ, கிரீன் டீ, வொயிட் டீ, ஊலாங் டீ எனப் பல வகையான தேநீர் உண்டு. 1 கிலோ 8.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் “டா ஹாங் போ டீ” வகையும் உலகில் உண்டு.

ஃபேநீஸ், டஸ்ட், கிரீன் டீ, சிடிசி டீ லீஃப், ஆர்கானிக் டீ என பல்வேறு தரங்களில் எஸ்டேட்டில் உற்பத்தியாகும் தேயிலைகளில், முதல் தர தேயிலையை அதனை உருவாக்கும் வேலையில் ஈடுபடும் எந்த தொழிலாளியும் 2000க்கு முன்னர் அருந்தியிருக்க வாய்ப்பில்லை. “டஸ்ட்” எனப்படும் கடைசிதர தேயிலையை குடும்பம் ஒன்றுக்கு மாதத்திற்கு இரண்டு கிலோ வரையிலும், அதன் விற்பனை விலையிலிருந்து கொஞ்சம் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம் அவ்வளவே.

உலகில் நாளொன்றுக்கு 300 கோடி குவளை தேநீர் அருந்தப்படுகிறது. ஒரேநாளில் பலமுறை உற்சாக பானமாக நாம் அருந்தும் தேநீரை உற்பத்திசெய்யும் தொழிலாளிகளில் ஒருபகுதியினர், குறைந்த கூலியில், ஒருவேளை உணவுக்காய் போராடியவர்கள் என்ற வரலாறு பொதுவெளியில் தெரியாமலேயே பருகிவருகிறோம்.

படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், அருண் பாஸ், இராபர்ட் சந்திர குமார்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com