
(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
நீதிமன்றக் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து அவர் தொடர்பான மேலும் இரண்டு மனுக்கள் விசாரிக்கப்பட இருக்கின்றன.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரி அளிக்கப்பட்டிருக்கும் மனு, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்டிருக்கும் அமலாக்கத்துறையின் மனு மற்றும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழங்கப்பட்டிருக்கும் மற்றொரு மனு ஆகிய இரண்டு மனுக்களும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் இன்று நடக்கவிருக்கிறது.
இதில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய வழக்கு, நீதிமன்றத்தில் 19வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நண்பகல் 12 மணிக்கு மேல் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
பட மூலாதாரம், TNDIPR
முந்தைய விசாரணையில் என்ன நடந்தது?
நேற்று நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையில்,
“செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது . மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை” என என். ஆர். இளங்கோ தனது வாதங்களை முன் வைத்தார்.
அதற்கு பதிலளித்து அமலாக்கத்துறை சார்பில், “விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல் நலக்குறைவு என கூறுகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.” என ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்தார்.
மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மூன்று மனுக்களும் இன்று விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டன.
பட மூலாதாரம், STALIN/TWITTER
மாநில மனித உரிமை ஆணையர் விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: