Doctor Vikatan: தினமும் இரவில் பால் குடிப்பது சரியானதா? என் தோழி வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் தினமும் இரவில் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்… இது சரிதானா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

முதல் வேலையாக அடுத்தவர் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள். இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். உணவுப்பழக்கத்தில் மிக முக்கியமாக இது பின்பற்றப்பட வேண்டும். உங்கள் தோழியின் வீட்டில் தினமும் இரவில் பால் குடிக்கும் வழக்கம் இருக்கிறது என்றால் அது அவர்களுக்கு ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
பால் குடிப்பதால் சிலருக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் ஏற்படும். அதாவது பாக்கெட் பால், பசும்பால், எருமைப்பால், ஆர்கானிக் பால்…. என எதுவானாலும் பால் குடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கழிவறையை நோக்கி ஓடுவார்கள். குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி காலையில் பால் கொடுத்து அனுப்பும்போது பசி உணர்வே இல்லாமல் உணர்வார்கள் அல்லது மிகவும் அசௌகர்யமாக உணர்வார்கள். எனவே அப்படி உணர்பவர்களுக்கு பால் தேவையில்லை.
இப்படி எந்தப் பிரச்னையும் இல்லை, பால் குடித்தால் ஏற்றுக்கொள்கிறது என நினைப்பவர்கள் பால் குடிக்கலாம். சிலருக்கு இரவில் வெதுவெதுப்பான சூட்டில் ஏதேனும் குடித்தால்தான் தூக்கம் வரும். அவர்களும் பால் குடிக்கலாம். பாலே குடிக்கக்கூடாது… அது எடையை அதிகரிக்கும், ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்றெல்லாம் யார் யாரோ சொல்வதைக் கேட்டு நீங்கள் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். உங்களுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்பதுதான் முக்கியம்.
உங்களுடைய வேலை, உடலுழைப்பு போன்றவற்றைப் பொறுத்து இது முடிவு செய்யப்பட வேண்டும். இரவில் வெதுவெதுப்பான பால் எடுத்துக்கொள்வதால் மறுநாள் காலையில் சுலபமாக மலம் கழிக்க முடியும். 100 மில்லி பாலில் 3.4 கிராம் புரதம் இருக்கிறது. இது பாதாம் பால் போன்ற மற்ற பால் வகைகளில் வேறுபடலாம்.

ஆனால் எல்லாவற்றிலும் சராசரியாக 3 கிராம் புரதச்சத்து இருக்கும். கால்சியமும் இருக்கிறது. தசைகள் மற்றும எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இவை இரண்டும் முக்கியம்.
இரவு உணவை சிலர் சீக்கிரமே முடித்துவிடுவார்கள். அதன்பிறகு தூங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான சூட்டில் சிறிது பால் குடிப்பது நல்லதுதான். பாலில் தண்ணீர் சேர்த்து நீர்க்கச் செய்து குடிக்கலாம். எந்த உணவுப்பழக்கமும் உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்பதைப் பொறுத்து பின்பற்றப்பட வேண்டும். பால் விஷயத்திலும் அப்படித்தான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.