மாவட்டத்தில் என்ன நடக்கிறது, கட்சியில் என்ன பிரச்னை, உங்களுக்கு எதாவது பிரச்னை உள்ளதா என்பதுபோன்ற பல கேள்விகளை கனிமொழி கேட்டுள்ளார். வேறு எந்த நிர்வாகிகளும் அறையில் இல்லாததால் கனிமொழியிடம் நிர்வாகிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படையாக கொட்டி உள்ளனர். அதில், மேயர் மகேஷுக்கு எதிராகவே அதிக நிர்வாகிகள் கருத்து கூறியதாக உள்தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அவர் பா.ஜ.க-வினருக்கு ஆதரவாக செயல்படுகிறார், திடீரென டென்சன் ஆகிறார் என சில நிர்வாகிகள் கூறி உள்ளனராம். அதே சமயம் மகேஷை மேயராக வர விடாமல் சதி செய்தவர்கள்தான் பிரச்னைக்கு காரணம் எனவும், அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பு கிழக்கு மாவட்டத்தில் தலையிடுவதும்தான் பிரச்னைக்கு காராணம் எனவும் சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனராம்.
கவுன்சிலர்களிடம் மாநகராட்சி சம்பந்தமான பிரச்னைகளை கேட்டறிந்துள்ளார் கனிமொழி. மகேஷுக்கு எதிராக புகார் வாசித்த கவுன்சிலர்களிடம் ‘இனி அந்த மாதிரி நடக்காமல் நான் சொல்லுகிறேன். இனி உங்களுக்கான வேலைகள் வந்துசேரும். நான் மேயரிடம் பேசுகிறேன்’ என கனிமொழி உறுதி அளித்துள்ளாராம். இதில் மாநில நிர்வாகிகள் 8 பேர், மாவட்ட நிர்வாகிகள் 15 பேர், ஒன்றிய நிர்வாகிகள் 11 பேர், பகுதி நிர்வாகிகள் 4 பேர், மாநகராட்சி கவுன்சிலர்கள் 23 என மொத்தம் 61 நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார் கனிமொழி.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணி நேரம் தொடர்ச்சியாக புகார்களையும், கருத்துக்களையும் கனிமொழி கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோரை தனியாக அழைத்து ஒருமணி நேரம் அட்வைஸ் செய்தாராம் கனிமொழி. அவர்களை சமாதானமாக போகும்படி கனிமொழி கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சி பிரச்னை குறித்த பஞ்சாயத்தை கனிமொழி நேரடியாக நடத்திய சம்பவத்தால் குமரி தி.மு.க பரபரத்து கிடக்கிறது.