`சுவர், கம்பம், கம்பிகள், பெட்டிகள் தாண்டி தாவிக் குதி!' சென்னைக்கு வந்தது பார்க்கூர் விளையாட்டு!

Share

சென்னை ஈக்காட்டுத்தாங்களில், தமிழகத்தின் முதல் பார்க்கூர் (Parkour) வகுப்பை நடத்திவருகிறார்கள் விஷ்வா, விஷால், விக்னேஷ் ஆகிய மூன்று நண்பர்கள். மூவருமே வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள்.

முதல் முறையாக விஷ்வா, யூடியூபில் பார்த்துக் கற்றுக்கொண்ட பார்க்கூர் வித்தைகளை, ஒரு பூங்காவில் முயன்றுகொண்டிருக்கும்போது, அங்கு விஷால் வந்துள்ளார். விஷால், விஷ்வாவிடம் தனக்கும் பார்க்கூர் சொல்லிக்கொடுக்கும்படி கேட்க, அந்தப் பூங்காவில் ஒரு சிறிய குழு வார இறுதிகளில் பார்க்கூர் செய்ய ஆரம்பித்தனர். கடைசியாக இவர்களுடன் விக்னேஷும் சேர்ந்து, மூவரும் சென்னையில் பார்கூர் பாட் என்ற பயிற்சிக் குழுவை ஆரம்பித்துள்ளனர்.

”பார்க்கூர் என்பது ஒரு வகையான உடற்பயிற்சி விளையாட்டுதான். இதில் பார்க்கூர் செய்பவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மிகவும் வேகமாக ஓடியும் தாண்டிக் குதித்தும் செல்வார்.

பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பார்க்கூர் கற்றுக்கொள்ள அழைத்து வருகிறார்கள். முன்பு, தெருவில் ஓடி மரம் ஏறிக் குதித்து விளையாடிய குழந்தைகள், இன்று அப்பார்ட்மென்ட் வீடுகளுக்குள் ஓடியாடி விளையாட முடியாமல் அவர்களின் உலகமே டி.வி அல்லது செல்போனிற்குள் சுருங்கிவிட்டது. அதனால், அவர்கள் பாதுகாப்பான ஒரு குழந்தைப் பருவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நான்கு வயதுக் குழந்தைகளைக்கூட பெற்றோர்கள் அழைத்து வருகிறார்கள். இதிலிருந்தே பார்க்கூரிங் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்குப் புரியும்.

பார்க்கூர்

குழந்தைகள் தரையில் விழுந்தாலும் அடிபடாத மாதிரி ஒரு மேட் போட்டிருப்போம். மற்றபடி, பெரியவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ குழந்தைகளுக்கும் அதே உடற்பயிற்சியைத்தான் சொல்லிக்கொடுக்கிறோம்” என்கிறார்கள் பார்க்கூர் பாட் பயிற்சியாளர்கள்

பயிற்சியாளர் விஷ்வா, “நான் ஒரு பிரஞ்சு திரைப்படம் பார்க்கும் போது, அதில்தான் முதல் முறையாக சிலர் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கூர் செய்வதைப் பார்த்தேன். அப்போதிலிருந்தே எனக்கு அதன்மீது ஒரு ஈர்ப்பு உருவாகியது. நானே இணையத்தில், அது பற்றிய விவரங்களைத் தேட ஆரம்பித்தேன். அப்போது ஆர்க்குட் பிரபலமாக இருந்த சமயம். அங்குதான் பார்க்கூர் பயிற்சி செய்யும் சில ஆன்லைன் நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களின் சில வழிநடத்துதல்படி,

பார்க்கூர்

நானே அருகில் இருக்கும் பூங்காவிலும், பீச்சிலும் பார்க்கூர் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னோடு விஷாலும் விக்னேஷும் இணைந்தார்கள். மேலும் சில நண்பர்களும் சேர்ந்து இதில் ஆர்வம் காட்டவே, முறையான ஒரு பயிற்சிக் கூடத்தை உருவாக்கலாம் என, பார்க்கூர் பாட் மையத்தை ஆரம்பித்தோம்” என்றார்.

விஷால், “பார்க்கூர் பாட் ஜிம்மை வடிவமைத்தது நான்தான். இதை வடிவமைக்க எனக்கு ஆறு மாதம் ஆனது. தமிழ்நாட்டில் சிலர் ஏற்கெனவே பல ஆண்டுகளாக பார்க்கூரிங் செய்து வந்தாலும், பார்க்கூரிங்கிற்கு என பிரத்தியேகமான ஜிம் அமைத்தது நாங்கள்தான். பார்க்கூர் ஒரு கலைவடிவம்தான். சுவர், கம்பம், கம்பிகள், பெட்டிகள், போன்ற பல தடைகளைக் கடந்து தாவிக் குதித்து முன்னேறிச் செல்ல வேண்டும். இது குறிப்பாக உடற்பயிற்சிக்கும், உடல் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவும் உதவுகிறது. பெரியவர்கள் திடீரெனத் தடுக்கி விழுவது, வழுக்கும்போது விழுந்து அடிப்படுவது போன்ற பல விபத்துகளில் இருந்து பார்க்கூர் பயிற்சி காப்பாற்றும்.

Vishal, Viswa and Vignesh

சிலர் கூகுளில் விடீயோக்களைப் பார்த்துவிட்டு, ஒரு கட்டடத்திலிருந்து இன்னொரு கட்டடத்திற்குத் தாவிச் செல்வதுதான் பார்க்கூர் என்று நினைத்து, அப்படியான சாகசங்களைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிறார்கள். ஆனால், சுமார் பத்தாண்டுகள் தரையில் சரியாக பார்க்கூர் செய்தால்தான், அந்த மாதிரியான சாகசங்களையெல்லாம் செய்துபார்க்க முடியும். இருபது வருடங்களுக்கு மேல் பார்க்கூர் கலையில் ஈடுபட்டு வருபவர்கள்கூட அதுபோன்ற சாகசங்களில் ஈடுபடாமல், பாதுகாப்பான பார்க்கூரையே பயிற்சி செய்கிறார்கள்” என்றார்.

விக்னேஷ், “இங்க பார்க்கூர் பாட்ல, பார்க்கூரிங் தாண்டி மார்சியல் ஆர்ட்ஸ், கேலஸ்தெனிக்ஸ், அக்ரோபேடிக்ஸ், சிலம்பம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம். நாகேஷ்வரா ராவ் பூங்காவில் சுமார் பத்து வருடங்களாக பார்க்கூரிங் பயிற்சி செய்கிறோம். பலரும் இந்தக் கலையை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். சிலர் இன்னும் கொஞ்சம் அச்சத்தோடு பார்த்தாலும், அவர்களிடம் இது ஒரு முறையான கலை என்று எடுத்துச் சொல்லும்போது புரிந்துகொள்கிறார்கள். 

பார்க்கூர்

பிரான்ஸ், பிரிட்டனில்தான் முதல் முறையாக மக்கள் அதிக அளவில் பார்க்கூர் செய்ய ஆரம்பித்தார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக அது பரவி, எல்லா நாடுகளிலுமே பார்க்கூர் செய்ய ஆரம்பித்தார்கள். டென்மார்க்கில், அரசாங்கமே பார்க்கூர் பூங்காக்கள் அமைத்து அங்கே மக்களை பாதுகாப்பாகப் பயிற்சி செய்யும்படி ஊக்குவிக்கின்றனர். 

இந்தியாவிலும் அரசு பலதரப்பட்ட கலைகளையும் விளையாட்டையும் ஊக்குவிக்கிறது. அதேபோல பார்க்கூர் விளையாட்டையும் நிச்சயம் எதிர்காலத்தில் அங்கீகரிப்பார்கள்” என்றார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com