தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் இர்ஃபான். இவரின் இர்ஃபான் வியூஸ் யூடியூப் சேனலில் பல்வேறு வகையான உணவுகளை ரிவியூ செய்வது முதல் பல்வேறு இடங்களுக்கும் சென்று ரிவியூ செய்து வரை வீடியோக்களைப் பதிவிடுவார். இவருக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், இவருக்குச் சொந்தமான சொகுசு கார் ஒன்று சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது.
அந்த கார் சென்னை அருகில் உள்ள மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது ஒரு மூதாட்டியின் மீது மோதியது. கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்துத் தகவலறிந்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விசாரணையில் அந்த கார் யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
விபத்தை ஏற்படுத்திய காரை இர்ஃபானின் நெருங்கிய உறவினர் அசாருதீன் என்பவர் ஒட்டியதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த பெண் குறித்த விசாரணையில், அவர் காட்டாங்குளத்தூர் முல்லை நகர்ப் பகுதியில் சேர்ந்த பழனி என்பவரின் மனைவியான பத்மாவதி என்பது தெரியவந்தது. அவர், பொத்தேரியில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.
சம்பவம் நடந்த தினம் பணியை முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள தனது மகளைப் பார்த்துவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பத்மாவதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அந்த விபத்து ஏற்படும்போது, இர்ஃபானும் அதே காரில் பயணித்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தை உள்ளாகிய அசாருதீன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்து தொடர் விசாரணை செய்துவருகிறார்கள்.