கோடை மழையில் நனைந்தால் சளி, காய்ச்சல் வரும் என்பது உண்மையா? மருத்துவ விளக்கம்!

Share

கோடை‌வெயில் சுட்டெரித்தாலும் தற்போது ஆங்காங்கே மழையும் பெய்து, கொஞ்சம் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஆனால், மழை‌ வந்துவிட்டாலே போதும் கூடவே சளி, காய்ச்சல் போன்ற உபாதைகளும் வந்துவிடும் என்ற பொதுவான மனப்பான்மை பலரிடம் இன்றும் உள்ளது. அதுவும் கோடைக்கால மழையில் நனையவே கூடாது; அவ்வாறு நனைந்தால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற கருத்துகள் எந்தளவுக்கு உண்மை என்பதை அறிய, பொது மருத்துவர் விஷாலிடம் பேசினோம்…

விஷால்
பொது மருத்துவர்

“மழைநீரில் நனைந்துவிட்டால் சளி, காய்ச்சல் வரும் என்று கூறப்படுவதில் உண்மை கிடையாது. வானில் இருந்து பெய்யும் மழைநீர் சுத்தமானதாகவே இருக்கும். அதில் எந்தவிதக் கிருமிகளும் இருக்காது.

எனவே, மழை‌நீரில் நனைவதால் காய்ச்சல் வரும் என்று கூறுவதை ஒப்புக் கொள்ளமுடியாது. சளி, காய்ச்சல் ஏற்பட பெரும்பாலும் காரணமாக இருப்பது வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவையே ஆகும்.

மழைக்காலங்களில் சளி, காய்ச்சல் அதிகமாக ஏற்படுவதைப் பார்க்க முடியும். மழை பொழியும் சமயத்தில் தட்பவெப்பநிலை குறைந்து, சுற்றுச்சூழல் குளுமையாக மாறும். அதனால், நம் உடல் வெப்பநிலையும் குறைந்து, அது நம் எதிர்ப்பாற்றல் மண்டலத்தை பாதிக்கும். இது நோய்க்கிருமிகள் நம் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிவிடும்.

காய்ச்சல்|மாதிரிப்படம்

இதுதவிர, மழை பொழியும் நேரங்களில் பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே அதிக நேரத்தைச் செலவிடுவர். காற்றோட்டம் குறைவான பகுதியில் அதிக நேரம் எல்லோரும் சேர்ந்து இருப்பதால் நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாகப் பரவும். இவை அனைத்தும்தான் மழைக்காலங்களில் சளி, காய்ச்சல் ஏற்பட காரணமே தவிர மழைநீர் இல்லை. மழையில் நனைந்து விட்டால் உடனடியாக ஆடைகளை‌ மாற்றிவிட்டு, தலையில் உள்ள ஈரத்தைக் காயவைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் உடல் குளிர்ச்சியாக இருப்பதைத் தடுக்க முடியும். அதனால் எதிர்ப்பாற்றல் மண்டலம் பாதிப்படையாமலும் பார்த்துக் கொள்ள முடியும். `கோடை காலத்தில் மழையில் நனையக்கூடாது. அது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று சிலர் கூறுவதில் பெரிதாக உண்மை கிடையாது.

சாதாரண சளி, இருமல்

மழைக்காலமோ, கோடை காலமோ எந்தக் காலத்தில் மழையில் நனைந்தாலும் அதிகநேரம் உடல் குளிர்ந்த நிலையில் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது. மழையில் நனைந்துவிட்டால் உடை மாற்றும் முன்பு, சோப்பு தேய்த்து உடலைக் கழுவுவது நல்லது” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com