பெங்களூருவில் நேற்று இந்த திரைப்படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்றவற்றை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இது தீவிரவாதத்தின் ஓர் ஆபத்தான வடிவம். இதில் துப்பாக்கிச் சத்தமோ, வெடிகுண்டுச் சத்தமோ எதுவுமில்லை. இந்த விஷ தீவிரவாதத்தை தி கேரளா ஸ்டோரி அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தகைய தீவிரவாதத்துக்கு எந்தவொரு மாநிலத்துடனோ அல்லது மதத்துடனோ தொடர்பு இல்லை.
ஆனால் இது இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்த்து, தவறாக வழிநடத்தி, அவர்களைத் தவறான பாதையில் தள்ளுகிறது. இந்தப் படம் அதை வெளிப்படுத்தி அதற்கு எதிராக எச்சரிக்கிறது. இதுவொரு படமாக இருந்தாலும்கூட தீவிரவாதம் பற்றி நிறைய சொல்கிறது. அதோடு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நாம் ஒரு சிறந்த சமுதாயத்தை நோக்கிச் செல்கிறோம். எனவே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நாம் அனைவருமே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.